கனிமொழி மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிபிஎம்
சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி உள்ளிட்டோர் மீது பாரபட்சமே இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத் திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா நவம்பர் 2010-ல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
இந்த ஊழலை விசாரித்து வரும் மத்திய குற்றப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்த முதலாவது குற்றப் பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 2ஜி ஒதுக்கீட்டில் பயனடைந்த ஸ்வான் நிறுவனத்தின் அங்கமான சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சி ரூ.214 கோடி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, தற்போது சிபிஐ தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப் பத்திரிகையில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவில் நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள ஆ.ராசா உள்ளிட்டவர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்று, தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 5 பேர் மீதும் பாரபட்சமற்ற முறையில் குற்றவியல் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசையும், மத்திய புலனாய்வுக் கழகத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும், அலைக்கற்றை ஊழல் பணத் தை முறைகேடாக பெற்று மூலதனமாக்கி செயல்பட்ட கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் செயல்பாட்டை நீதிமன்ற விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்கவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications