கோவை கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
கோவை: கோவை கமிஷனர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். புகார் கொடுக்க அனுமதிக்காததால் இப்படி செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொலைபேசி மிரட்டல்
கடந்த மாதம் 27-ம் தேதி கோவை கமிஷனர் அலுவலகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் இன்னும் சிறிது நேரத்தில் கமிஷனர் அலுவலகம் வெடித்துச் சிதறப்போகிறது என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதனையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு கமிஷனர் அலுவலகக் கட்டிடத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. அந்த அழைப்பு வெறும் புரளி என தெரிய வந்தது.
இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடிக்க சைபர் கிரைம் உதவி கமிஷனர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில் ஆண்டிபட்டி அருகேயுள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தேனி ராஜா எனும் மில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மிரட்டல் ஏன்?
பத்து வருடங்களுக்கு முன் கோவை வந்த தேனி ராஜா பல்வேறு மில்களில் பணியாற்றியுள்ளார். ஈரோட்டில் உள்ள மில்லில் வேலை பார்த்தபோது உடன் வேலை செய்த தாளவாடி பெண் ஒருவரை காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்ய முயன்றபோது பெண்ணின் பெற்றோர் தடுத்துள்ளனர். அந்தப் பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கமிஷனரிடம் மனு கொடுக்க வந்துள்ளார். ஆனால், போலீசார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த கோபத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக டெலிபோன் செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேற்கு மண்டல ஐ.ஜி செல்போன் எண்ணுக்கும், சூலூர் காவல் நிலையத்திற்கும் இதே மாதிரி டெலிபோன் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
