ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு மூமுக தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்பு
மதுரை: நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். இதன் மூலம் மக்களின் சமுதாய, பொருளாதார சூழ்நிலை தெரியவரும் என மத்திய அமைச்சரவை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பாக ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடந்த 1931-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் சுமார் 15 முக்கிய ஜாதிகளும், சுமார் 230-க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஜாதிகள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அதே போன்று தேவர் (கள்ளர்), தேவர் (மறவர்), தேவர் (அகமுடையார்) என்ற பிரிவுகள் உள்ளன. இதனைத் தனித்தனியாக கணக்கெடுக்காமல் ஒட்டுமொத்த தேவரினமாக கணக்கெடுத்து அறிவிக்கவேண்டும்.
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேவர் இனம் என்ற ஆணை உள்ளது. பிறகு வந்த கருணாநிதி அந்த தேவரின் ஆணையைக் கிடப்பில் போட்டுவிட்டார்.
எனவே முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட என மத்திய அரசை வலியுறுத்துகின்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications