ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்குக் கீழ் சம்பளம்-வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம்!

இந்தியாவில் மாத வருமானம் வாங்குவோர் கட்டும் வருமான வரி தான் மத்திய அரசுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இதை சம்பளத்தைத் தரும்போதே பிடித்தம் செய்து விடுகிறார்கள் (tax deduction at source-TDS).
இந்த வரியையும் கட்டிவிட்டு, ஆண்டுதோறும் வருமான வரி அலுவகத்துக்குப் போய் மணிக்கணக்கில் வரிசையில் நின்று, 'நான் வரி கட்டிவிட்டேன்' என்று உறுதிப்படுத்த வருமான வரிக் கணக்கையும் (tax returns) தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், மாத ஊதியம் அல்லாமல், கணக்கிலும் காட்டாமல் லட்சக்கணக்காக வருமானம் ஈட்டுவோரை கேட்க ஆளில்லை. இவர்களாகப் போய் வருமான வரியைக் கட்டினால் தான் உண்டு.
இந் நிலையில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று ம்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுதிர் சந்திரா கூறியுள்ளார்.
2011-12ம் நிதியாண்டு முதல் இது அமலுக்கு வரும். அதாவது 2010-11ம் நிதியாண்டில் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக வருமானம் ஈட்டுவோர் 2011-12 நிதியாண்டில் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
ஏற்கனவே கூடுதலாக வரி கட்டிவிட்டவர்கள், அதை ரீபண்ட் பெற வேண்டுமானால் மட்டும் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் ஆண்டு ஊதியம் ரூ. 5 லட்சத்துக்குக் குறைவாக இருந்தாலும், மற்ற வகையில் கூடுதல் வருமானம் ஏதாவது ஈட்டினால், அந்த விவரத்தை பணி செய்யும் இடத்தில் தெரிவித்து, வருமான வரி விலக்கை பெறலாம். அப்போது பணியாளர்களுக்கு தரப்படும் பார்ம்-16 ஆவணமே வருமான வரிக் கணக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications