விழுப்புரத்தில் மனைவியின் கண் முன் கணவனைக் கொன்று, தங்க நகைகள் கொள்ளை
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியின் கண் முன்பே கணவனைக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் நாராயணன் நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன். அவரது மனைவி லட்சுமி. நேற்றிரவு (20-ம் தேதி) தீனதயாளன் தன் குடும்பத்தாரோடு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் வீட்டுப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். அவர்கள் பீரோவை உடைக்காமல் துணிச்சலாக தீனதயாளனையும், அவரது மனைவியையும் எழுப்பி சாவி கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
நடுராத்திரியில் வீட்டுக்குள் திருடர்களைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சாவியைக் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் லட்சுமியைக் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு தீனதயாளனை உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிர் இழந்தார்.
திருடர்கள் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கண் முன்பே கணவனைக் கொன்றுவிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications