சுதந்திர தினம்: கொடியேற்ற நேரம் மாற்றம், கலைநிகழ்ச்சிகள் நேரம் குறைப்பு
நெல்லை: தமிழகத்தில் சுதந்திர தினவிழாவன்று கொடியேற்றும் நேரம் 9.30 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, மாணவ, மாணவிகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடியரசு தின விழா, சுதந்திரதின விழாவை முன்னிட்டு கோட்டையில் முதலமைச்சரும், அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்களும் கொடியேற்றுவது வழக்கம். குடியரசு தினவிழா கொடியேற்றம் காலை 8 மணிக்கும், சுதந்திர தினவிழா கொடியேற்றம் காலை 8.30 மணிக்கும் நடக்கும்.
இந்த கொண்டாட்டங்களின்போது போலீசாரின் அணிவகுப்பு, தியாகிகள் கெளரவித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு சுதந்திர தினவிழா கொடியேற்றம் காலை 9.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை சுருக்கிக் கொள்ளும் சூழ்நிலைக்கு மாவட்ட நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. பொதுவாக காலை 8.30 மணிக்கு கொண்டாட்டங்கள் துவங்கும்போது காலை 10 மணிக்குள் விழா முடிந்துவிடும். ஆனால் தற்போது 9.30 மணி கொடியேற்றி நிகழ்ச்சி நடப்பதால் 10 மணிக்கு பின்னர்தான் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதனால் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. நெல்லையைப் பொருத்தவரை 8 பள்ளிகள் வரை சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களில் பங்கேற்கும். இந்த ஆண்டு 6 பள்ளிகளுக்கு 5 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகளுக்கு மொத்தம் 30 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications