தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் என்று யாரும் இல்லை: ஈ.வி.கே.எஸ்.
மதுரை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தற்போது தலைவர் என்று யாரும் இல்லை. தங்கபாலு முன்னாள் தலைவர்தான். தலைவர் பெயரை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும். திமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தால் திமுகவை வெறுக்கும் மக்கள் காங்கிரஸையும் வெறுப்பார்கள்.
அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது. நில அபகரிப்புப் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டும்படி உள்ளன.
டெல்லி சென்றிருந்த முதல்வர் ஜெயலலிதா, திட்டக் குழுத் துணைத் தலைவர் அலுவாலியாவைச் சந்தித்துவிட்டு திரும்பியப் பிறகு, தமிழகத்துக்கு கேட்டதைவிட கூடுதலாக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், 15 தினங்களுக்குப் பின்னர் மத்திய அரசு எந்த நிதியும் தரவில்லை என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், திடீரென மத்திய அரசை விமர்சித்ததற்கான காரணம் தெரியவில்லை.
நல்லாட்சி தரும் நோக்கத்தோடு அதிமுக செயல்பட்டால் வரவேற்போம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications