ஸ்ட்ரைக்கால் பாதிப்பில்லை... லாரிகள் வழக்கம்போல் ஓடின... காய்கறிகள் வரத்தால் விலை சரிவு!

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு இதில் பங்கேற்பதில்லை என அறிவித்தது.
வழக்கம் போல ஓடின...
ஆனால் நேற்று சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வழக்கம்போல லாரிகள் ஓடின. சென்னையில் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வழியாக பெங்களூர் செல்லும்வழியில் வழக்கமாக நிறைய லாரிகள் ஓடும். அதேபோல நேற்றும் லாரிகள் ஓடின.
ரெட்டை ஏரி, மாதவரம், செங்குன்றம் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் வழக்கமாக லாரிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் எண்ணிக்கை அளவு சற்று குறைவாக இருந்தது. ஓடிய லாரிகளை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. எந்த பயமும் இன்றி டிரைவர்கள் லாரிகளை ஓட்டிச்சென்றனர்.
மாதவரத்தில் 100 அடி ரோடு ரவுண்டானா அருகே உள்ள லாரிகள் நிறுத்தும் இடத்தில் லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அங்கு லாரி டிரைவர்களிடம் கேட்டதற்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்த லாரிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லாரிகள் ஓடவில்லை. அதனால் வேலை இல்லாமல் சும்மா இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் அங்கு லாரிகள் வேலை நிறுத்தம் இல்லை என்று பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்து லாரிகள் வெளியே சென்று கொண்டும் இருந்தன.
வால்டாக்ஸ் ரோடு
வால்டாக்ஸ் ரோட்டில் லாரிகள் பல நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. அங்கு இருந்த லாரி டிரைவர்களிடம் கேட்டதற்கு சரக்கு ஏற்றியதும் லாரிகள் ஓடும் என்றனர். சில லாரிகள் அங்கிருந்து மற்ற இடங்களுக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் காய்கறிகள் வருவது வழக்கம்.
320 லாரிகளில் காய்கறி
இது குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 320 லாரிகளில் காய்கறிகள் வரும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில்இருந்து கத்திரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் வரும். கர்நாடகாவில் இருந்து உருளை, கோஸ், காலிபிளவர் ஆகியவை ஏற்றிய லாரிகள் வரும்.
ஆந்திராவில் இருந்து சேனை, பீட்ரூட், நூக்கல் முதலிய காய்கறிகளை ஏற்றியலாரிகள் வரும். மராட்டியத்தில் இருந்து பெல்லாரி வெங்காயம் ஏற்றிய லாரிகள் வரும். எப்போதுமே ஒருநாளைக்கு முன்னதாக இரவிலேயே காய்கறிலாரிகள் வந்துவிடும்.
காய்கறி விலை உயர்வு இல்லை
அதேபோல 19-ந் தேதி (நேற்று) விற்பனைக்கு தேவையான காய்கறிகளை ஏற்றிய லாரிகள் 18-ந் தேதி இரவிலேயே கோயம்பேட்டுக்கு வந்துவிட்டன. அதாவது 320 லாரிகளும் வந்துவிட்டன. அதனால் நேற்றைய விற்பனையில் எந்த வித பாதிப்பும் இல்லை. காய்கறி விலையும் உயரவில்லை. 20-ந் தேதி (இன்று) விற்பனைக்கு தேவையான காய்கறிகளை ஏற்றிய லாரிகள் உரிய நேரத்தில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.
90 சதவீத லாரிகள் ஓடின
லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து கூட்டமைப்பு தலைவர் சுகுமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
சென்னையில் 90 சதவீத லாரிகள் ஓடின. சில லாரிகள் மட்டுமே ஓடவில்லை. ஆந்திரா,பெங்களூர் போன்ற இடங்களுக்கு சென்னையில் இருந்து லாரிகள் சென்று கொண்டிருக்கின்றன.
சென்னைமாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், காஞ்சீபுரம் மாவட்டம், வேலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் ஆகிய 5 மாவட்டங்களில் லாரிகள் ஓடின. புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் லாரிகள் ஓடுகின்றன.
லாரிகள் ஓடவில்லை
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து வெளியிடங்களுக்கு லாரிகள் ஓடவில்லை. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உள்ளூர்களில் லாரிகள் ஓடின.
பாடப் புத்தகங்கள்
சென்னையில் இருந்து 60 லாரிகளில் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல், நெல்லை முதலிய மாவட்டங்களுக்கு புறப்பட்டுச்சென்றன. மொத்தத்தில் தமிழ்நாட்டில் 60 சதவீத லாரிகள் ஓடின. வெளிமாநிலங்களுக்கு சில மாவட்டங்களில் இருந்து லாரிகள் செல்லவில்லை. திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தம் சரியாகிவிடும்," என்றார்.












Click it and Unblock the Notifications