மீன்பிடி விதிமீறல்: முட்டம் கடலில் 19 மீனவர்கள், 2 விசைப்படகுகள் சிறைபிடிப்பு
குளச்சல்: முட்டம் கடலில் மீன்பிடித்த கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளைச் சேர்ந்த 19 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் முட்டம் மீனவர்கள் சிறை பிடித்தனர்.
கடற்கரை பகுதியில் இருந்து 5 மைல் தூரத்தில் தான் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டும் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறையை மீறி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதாக கட்டுமரம் மற்றும் நாட்டு படகு மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் முட்டம் பகுதி மீனவர்கள் கட்டுமரம், நாட்டுப் படகுகளில் நேற்று காலை வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது முட்டம் கடற்கரையில் 3 மைல் தூரத்தில் கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த முட்டம் மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீனவர்கள் 19 பேரையும் சிறைபிடித்து முட்டம் கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்சன், தேவதாஸ், அனிதா, மு்ட்டம் பங்குதந்தை ராஜு, விசைப்படகு நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முட்டம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டனர்.












Click it and Unblock the Notifications