பெண் வக்கீல்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு பெருகுகிறது- ஒருவருக்கு உடல் நலம் பாதிப்பு
சென்னை: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் வக்கீல்களின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இவர்களில் கயல் என்கிற அங்கயற்கண்ணியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் நிலவுகிறது.
இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருவோர் சென்னைக்கு திரண்டு வந்து பெரும் போராட்டம் நடத்த வேண்டும் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் போராட்டம் வலுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்று பேரையும் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேட்டில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர்.
இன்று 3வது நாளாக அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வெறும் தண்ணீர் மட்டுமே அவர்கள் குடித்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அங்கயற்கண்ணிக்கு உடல் நிலை மோசமாகி வருகிறது. மூன்று பேருக்குமே ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைப் படையால் கைது செய்யப்பட்டவர் கயல்
உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று வக்கீல்களில் ஒருவரான கயல் என்கிற அங்கயற்கண்ணி, இலங்கைக்குச் சென்று முள்வேலி முகாம்களில் அடைபட்டிருந்த தமிழர்களைச் சந்தித்து வந்த துணிச்சல்காரர். அப்போது அவரை இலங்கைப் படையினர் புகைப்படம் எடுத்து விட்டதாக கூறி கைது செய்தனர். இதையடுத்து இந்திய அரசு தலையிட்டு அவரை மீட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
வைகோ ஆதரவு
இந்தநிலையில், மூன்று பேரையும் பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் வைகோ கூறுகையில், மக்கள் அணி அணியாக திரண்டு அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். அனைவரும் மூன்று தமிழர்களையும் காக்க போராட்டம் நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அதேபோல திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் மணிவண்ணன், அமீர் ஆகியோரும் நேரில் பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் 3 பேர் உண்ணாவிரதத்தில் குதித்தனர்
இதற்கிடையே மூன்று வக்கீல்களுடன் இன்று மேலும் 3 பேர் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சமூக சேவகர் அகிலா, தமிழரசி, உதவி இயக்குநர் மகேந்திர வர்மா ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துள்ளதால் போராட்டம் வலுத்துள்ளது.
மதுரையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் மூன்று தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரையில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மாவட்ட நீதிமன்றம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாளை முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
ராம கோபாலன் கொடும்பாவி எரிப்பு
இதற்கிடையே, மூன்று பேரையும் தூக்கில் போட வேண்டும் என்று பேசிய இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலனைக் கண்டித்து புதுச்சேரியில், சட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. இது தொடர்பாக 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications