இந்தியாவை வளம் கொழிக்க உதவும் நதி நீர் இணைப்புக்காக போராடுவாரா அன்னா?

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
சென்னை: இந்தியாவை வளம் மிக்க நாடாக மாற்ற பேருதவி புரியும் என்று பல்துறை நிபுணர்களால் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும், கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நதிகளை இணைக்கும் மிகப் பெரிய திட்டத்தை காங்கிரஸ் கட்சி தூக்கித் தூரப்போட்டு விட்டது. ஊழலுக்கு எதிரான லோக்பால் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ள அன்னா ஹஸாரே இந்த அரும் பெரும் திட்டத்திற்காக குரல் கொடுத்து போராட முன்வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

அன்னா ஹஸாரேவின் இரும்புப் பிடியான போராட்டம் மத்திய அரசை ஆட்டிப் படைத்து விட்டது. நாடாளுமன்றத்தையே வளைந்து போகச் செய்து விட்டது. சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் அரசியல் சார்பற்ற ஒரு இயக்கம் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வென்றது அரிய நிகழ்வாகவே உள்ளது. அந்த வகையில் அன்னாவின் போராட்டம் ஒரு சாதனைதான்.

இந்த நேரத்தில் அன்னா முன்பு பல்வேறு கோரிக்கைகள் வந்து விழ ஆரம்பித்துள்ளன. பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்துடன் 12 நாள் உண்ணாவிரதம் இருந்து போராடிய அன்னா, கீழ்க்கண்ட பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

1. நதி நீர் இணைப்புத் திட்டம்

பல காலமாகவே இந்தத் திட்டம் குறித்த பேச்சு இந்தியாவில் இருந்து வருகிறது. இந்தியாவை முழுமையான பசுமை பொங்கும் நாடாகவும், வளம் மிக்க நாடாகவும் மாற்ற இதுவே சரியான வழி என்று பல்துறை நிபுணர்களும் ஆமோதித்துள்ளனர். இந்தியாவின் ஒரு பகுதி வெள்ளக்காடாக இருக்கும் நிலையில் இன்னொரு பகுதி வறட்சியின் பிடியில் தவிக்கும் விநோதம் தொடர்ந்து கொண்டுள்ளது.

பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் நாட்டின் இதர பகுதகிளில் வறட்சி தாக்கும்போது கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த அவல நிலையை நீக்க, நாட்டில் உள்ள முக்கிய நதிகளை குறிப்பாக கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட நதிகளை இணைத்து நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர், பாசன வசதி, மின் உற்பத்தி என அனைத்து வசதிகளையும் பெருக்க நதி நீர் இணைப்புதான் ஒரே வழி என்ற கருத்து உருவெடுத்தது.

கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில் இதுகுறித்து தீவிரத் திட்டம் உருவாக்கவும் செய்தனர். இதற்கான பூர்வாங்கப் பணிகளையும் வாஜ்பாய் அரசு மேற்கொண்டது. இருப்பினும் பின்னர் வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தூக்கி குப்பையில் போட்டு விட்டது இத்திட்டத்தை.

சில மாதங்களுக்கு முன்பு இது உருப்படாத திட்டம், தேவையில்லாத திட்டம் என்று திருவாய் மலர்ந்தருளினார் ராகுல் காந்தி. இதை பிரதமரும், பிறரும் கூட ஆமோதித்தனர். இதன் மூலம் நதி நீர் இணைப்புத் திட்டம் மூடு விழா கண்டது.

ஊழலுக்கு எதிராக பெரும் போராட்டத்தைத் தொடங்கி மத்திய அரசை ஆட்டிப் படைத்த அன்னா ஹஸாரே இந்தத் திட்டத்திற்காகவும் போராட முன் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2. நதிகள் தேசியமயமாக்கல்

இதேபோல நாட்டை உலுக்கி வரும் இன்னொரு பிரச்சினை நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை. பல்வேறு மாநிலங்களுக்கிடையே இன்று பெரும் தலைவலியாக இருப்பது நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைதான்.

தமிழகம்-கேரளா, கர்நாடகா-ஆந்திரா, கர்நாடகா-மகாராஷ்டிரா, ஆந்திரா-கர்நாடகா, மகாராஷ்டிரா-குஜராத் என பல மாநிலங்களிலும் நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை மிகப் பெரிதாக உள்ளது.

இதனால் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையி்ல் சில மாநிலங்கள் நடந்து கொள்கின்றன. தவித்த வாய்க்குத் தண்ணீர் தராதவன் மனிதனே இல்லை என்பார்கள். ஆனால் சில மாநிலங்கள் நடந்து கொள்ளும் விதம் மனித நேயத்தை காலில் போட்டு மிதிக்கும் அளவில் உள்ளது.

இதுபோன்ற அவல நிலையை நீக்க நாடு முழுவதும் உள்ள நதிகளை தேசியமயமாக்கி அதை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தண்ணீர் தேவைப்படும் மாநிலங்களுக்கு தண்ணீர் தரும் பொறுப்பை மத்திய அரசு கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு நிலை ஏற்பட்டால்தான் மாநிலங்களுக்கு இடையியான நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

இதற்காகவும் அன்னா போராடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது மட்டுமல்ல, இப்படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றுக்கெல்லாம் ஆண்டாண்டு காலமாக தீர்வே இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட ஒரு பொதுவான தலைவர் இல்லாத நிலையே இன்று வரை. தற்போது அன்னா ரூபத்தில் ஒரு வழி பிறந்துள்ளதாக தெரிகிறது. ஊழலை மட்டும் கையில் எடுக்காமல், நதிகள் இணைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகளுக்காகவும் அவர் போராட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+