சுரங்க ஊழல்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, பிவி ஸ்ரீனிவாஸ் ரெட்டி கைது

பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் நடந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததில் எதியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ரெட்டி சகோதரர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக கர்நாடக லோக் ஆயுத்கா சமர்பித்த அறிக்கையின் மீது மாநில பாஜக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று அதிகாலையில் பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன் ரெட்டியின் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அப்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
30 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி பணம் பறிமுதல்:
மேலும் 30 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.5 கோடி பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெங்களூரில் உள்ள ஜனார்தன் ரெட்டியின் வீட்டிலும் சோதனை நடந்தது.
இதையடுத்து ஜனார்த்தன் ரெட்டி மற்றும் அவருடைய உறவினரும் சுரங்க நிர்வாகியுமான பி.வி. ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகி்யோர் கைது செய்யப்பட்டனர். ஸ்ரீனிவாஸ் ரெட்டி வீட்டில் ரூ. 3 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் நடந்த சுரங்க ஊழல் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதியூரப்பா ஆட்சியில் ஜனார்த்தன் ரெட்டி சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சராக இருந்தார். சுரங்க ஊவல் குறித்து கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி சமர்பிக்கப்பட்ட லோக்ஆயுக்தா அறிக்கையில் ஜனார்த்தன் ரெட்டியின் பெயரும் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஒபுலாபுரம் மைனிங் கம்பெனி உரிமையாளர்களில் ஒருவர். அவரது சகோதரர்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகியோருக்கும் இந்த நிறுவனத்தில் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐன் தீவிர கண்காணிப்பில் உள்ள 65 சுரங்க நிறுவனங்களில் ஜனார்த்தன் ரெட்டி நிறுவனமும் ஒன்று.
பதவி விலகிய ஸ்ரீராமுலு வீட்டிலும் சோதனை:
இந் நிலையில் கர்நாடக பாஜக எம்எல்ஏ பதவியிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலுவின் வீட்டிலும் இன்று சிபிஐ சோதனை நடத்தியது.
பாஜகவில் ஏற்பட்ட கோஷ்டி சண்டையால் தனது எம்எல்ஏ பதவியையும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த ஸ்ரீராமுலு, ரெட்டி சகோதரர்களின் கூட்டாளியாவார்.
இவர் மீதும் லோக் ஆயுக்தா அறிக்கையில் சுரங்க ஊழல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து விரைவில் ஸ்ரீராமுலுவும் ஜனார்தன ரெட்டியின் சகோதரர்களான மற்ற இரு ரெட்டிகளும் கைதாவார்கள் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஜனார்தன ரெட்டி ஹைதராபாத் சிபிஐ அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.


Click it and Unblock the Notifications
