For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சி விமான நிலையத்தில் கைது

By Chakra
Google Oneindia Tamil News

Ramajayam
கொச்சி: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி, ராமஜெயம் இன்று காலை கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சியில் அண்ணா அறிவாலயம் கட்ட தனியார் ஒருவரின் நிலத்தை மிரட்டி அபகரித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேரு, திருச்சியை சேர்ந்த ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், ராமஜெயம் அப்போது வெளிநாட்டில் இருந்தார். இதனால் அவர் கைதாவதில் சிக்கல் எழுந்தது. இந் நிலையில் இந்தியா திரும்பிவிட்ட அவர் திருச்சி பக்கம் வரவில்லை. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இவர் குறித்த விவரத்தை தமிழக போலீசார் நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இவர் மீது வழக்கு இருப்பதால், இவர் வந்தால் கைது செய்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கோரியிருந்தனர்.

இந் நி்லையில் ராமஜெயம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானத்தில் மலேசியா செல்லத் திட்டமிட்டிருந்தார். அப்போது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த விமான நிலைய எமிக்ரேசன் பிரிவு அதிகாரிகள், உங்கள் மேல் வழக்கு உள்ளது என்று கூறி, அவரை தனி அறையில் அமர வைத்துவிட்டு தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு திருச்சி போலீசார் கோரினர். இதைத் தொடர்ந்து விமான நிலையம் அருகே உள்ள நெடுமஞ்சேரி காவல் நிலைய போலீசார் வசம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அவரை திருச்சிக்குக் கொண்டு வர திருச்சி போலீசார் கொச்சி விமான நிலையத்திற்கு விரைந்துள்ளனர்.

கலைஞர் அறிவாலயம் தவிர, திருச்சி காஞ்சனா டவர்ஸ் ஹோட்டல் நில அபகரிப்பு வழக்கிலும் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

திருச்சி நீதிமன்றத்தில் கே.என்.நேரு ஆஜர்:

இந் நிலையில், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நேரு இன்று இந்த நில அபகரிப்பு வழக்குத் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது காவல்துறை உதவி ஆணையர் மாதவன், நேருவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தரக் கோரி திருச்சி 4வது நீதிமன்ற மாஜிஸ்ரேட் புஷ்பராணியிடம் மனு செய்தார்.

அப்போது வாதாடிய அரசு வழக்கறிஞர், நேருவுக்கு மட்டுமே தெரிந்த சில உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு போலீஸ் விசாரணை அவசியமாகிறது. ஆகையால் போலீஸ் காவல் வேண்டும் என்றார்.

இதை எதிர்த்து கே.என்.நேரு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இந்த வழக்கு நில சம்மந்தப்பட்ட சிவில் வழக்கு. இதனால் புகார் தந்தவர்கள் சிவில் நீதிமன்றத்தையே அணுக வேண்டும். எனது கட்சிக்காரர் கே.என்.நேரு மூன்று முறை அமைச்சராக இருந்துள்ளார். அரசியல் உள்நோக்கத்துககாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் ஆதாரம் கிடைத்த பின்பே கைது செய்வார்கள். ஆனால், இந்த வழக்கில் கைது செய்துவிட்டு ஆதாரத்தை தேடுகிறார்கள். இந்த கைது சட்டத்துக்குபுறம்பானது. எனவே போலீஸ் காவல் தேவையில்லை என்றனர்.

இந்த மனு மீது மாலையில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

English summary
Former DMK minister KN Nehru's brother Ramajayam arrested at Cochi airport in land grabbing case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X