திமுகவின் குறைகளை பாமக உறுப்பினர் எப்போது கண்டுபிடித்தார்?-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியின் குறைகளைத் தேர்தலுக்கு முன்பு கண்டுபிடித்தாரா அல்லது தேர்தலுக்குப் பின்பு கண்டுபிடித்தாரா என்று பா.ம.க. உறுப்பினர் கலையரசுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது நடந்த விவாதம்:

அணைக்கட்டு தொகுதி பாமக எம்எல்ஏ கலையரசு: கடந்த மத்திய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.5,000 கோடி வரை ஒதுக்கினார். ஆனால் முந்தைய திமுக அரசு அந்த நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிவிட்டது வேதனை தரக்கூடியது. சென்னை எழும்பூர் அரசு தாய்சேய் நல மருத்துவமனை மேம்பாட்டிற்கு ரூ.100 கோடி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு ரூ.150 கோடி என நிதி ஒதுக்கியும் திமுக அரசு அவற்றை பயன்படுத்தி கொள்ளவில்லை.

அமைச்சர் கே.பி.முனுசாமி: இவ்வளவு குற்றச்சாட்டை சுமத்தும் பா.ம.க. உறுப்பினர் கடந்த தேர்தலில் மட்டும் ஏன் அவர்கள் தலைமையில் இயங்கினார்?

கலையரசு: அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம்.

அமைச்சர் வைத்திலிங்கம்: அரசியல் மாற்றம் வேறு, கூட்டணி மாற்றம் வேறு. திமுக ஆட்சியை அகற்றி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அரசு அமைந்திருப்பது தான் அரசியல் மாற்றம். நீங்கள் அடிக்கடி கூட்டணி மாறுகிறீர்கள்.

கலையரசு: கூட்டணியை மாற்றுவது கூட மக்களின் நன்மைக்காக தான்.

முதல்வர் ஜெயலலிதா: திமுக அரசு சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்று உறுப்பினர் கலையரசு இங்கு குற்றச்சாட்டுகளைக் கூறினார். குறிப்பாக, தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தை (செயல்படுத்த அப்போது மத்திய அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ரூ.5,000 கோடியை தமிழகத்துக்கு அளித்தார். ஆனால், நிதியைச் செலவழிக்காமல் திமுக அரசு திரும்ப அளித்து விட்டது. இதே போன்று பொது சுகாதாரத் திட்டத்தின்கீழ் சென்னை அருகே தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.900 கோடியை அளிப்பதாகக் கூறி நிலம் தருமாறு தமிழக அரசிடம் டாக்டர் அன்புமணி கூறினார். ஆனால், அதற்குரிய நிலத்தை தமிழக அரசு அளிக்கவில்லை.

பல திட்டங்களை அறிவித்துவிட்டு திமுக அரசு எதையுமே செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதை அவர் எப்போது கண்டுபிடித்தார்?. தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் முன்பே கண்டுபிடித்தாரா? அல்லது ஒருவேளை வெற்றி பெற்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டு இப்போது தான் கண்டுபிடித்தாரா? என்பதற்கு அவர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

கலையரசு: நான் இந்த அவைக்கு புதியவன், அரசியலுக்கும் புதியவன், எங்கள் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக பேசக்கூடியவன்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: உறுப்பினர் பட்டவர்த்தனமாக பேசக் கூடியவராக இருக்கலாம். காலையில் ஒன்று பேசுவார்கள், அதனை மறந்துவிட்டு மாலையில் ஒன்று பேசுவார்கள். இவர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவியில் இருந்தபோது கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டை மூடியது யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். கூட்டணிக்கு வரும் முன் கடந்த அரசுக்கு 0 மார்க்' போடுகிறீர்கள். கூட்டணிக்கு வந்த பின் 100 மார்க்' போடுகிறீர்கள். அது எப்படி?.

கலையரசு: சர்க்கரை நோய் காரணமாக அதிகமானோர் பாதிக்கப்படுவதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சபாநாயகர் ஜெயகுமார்: முதல்வரின் கேள்விக்கு பதில் இல்லையா?

இவ்வாறு விவாதம் நடந்தது.

பண்ருட்டி பாடிய எம்.ஜி.ஆர். பாட்டு:

முன்னதாக குழந்தைகள் நல்வாழ்வுக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதற்காக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பேசினார்கள்.

தேமுக சார்பில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி' என்று எம்.ஜி.ஆர். பாடியது போல, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள குழந்தைகள் நல்வாழ்வுத் திட்டம், ஆள் வளரவும், அறிவு வளரவும் நிச்சயம் பயன்படும் என்றார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் எம்.ஜி.ஆர். பாடலை பாடியபோது, அதிமுக உறுப்பினர்களும், தேமுதிக உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+