நஞ்சை கக்குவதற்கு தொலைக்காட்சிகள் டெல்லியிலே துடித்துக் கொண்டிருக்கின்றன: வைகோ

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பயணத் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைகோ பேசுகையில், தலைநகர் சென்னையின் வரலாற்றில், உயர்நீதிமன்ற நிகழ்வுகளில் ஆகஸ்ட் 30ம் தேதி சந்தித்தைப் போன்ற உணர்ச்சிகளின் சங்கமத்தை இதுவரை சந்தித்தது கிடையாது.
கோடான கோடி தமிழர்களின் மனது பதைப்பதைத்திருந்தது. சாந்தன், முருகன், பேரறிவாளனுக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்ற முடிவு என்ன ஆகும். தாயத்தில், தமிழத்தில், கடல் கடந்த நாடுகளில், தரணி எங்கும் வாழும் தமிழர் மனங்களில் வேதனை நெருப்பு மண்டி எழுந்த வேளையில் உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நாகப்பன் அவர்களும், சந்திய நாராயணா அவர்களும், அந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அவர்கள் எடுத்து வைத்த வாதங்களை கேட்டு, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கிறோம், அரசுகள் தங்கள் கருத்துக்களை இந்த நீதிமன்றத்துக்கு தருவதற்கு எட்டு வார காலம் தவணை அறிவிக்கிறோம் என்ற சொற்கள் அந்த நீதிமன்றத்தல் ஒலித்த வேளையில் கண்ணீர் விட்டவர்கள் பலர். அவர்களது இருதயங்களில் ஏற்பட்ட உணர்வுகளை அடக்க முடியாமல் துடித்தவர்கள் பலர்.
வழக்கு ஒன்று பதிவாகியிருக்கிறதாமே உச்ச நீதிமன்றத்தில். சென்னை உயர் நீதிமன்றத்திலே விசாரிக்கப்படுகின்ற, மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கின்ற பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை பற்றி அவர்கள் தொடுத்திருக்கக்கூடிய விண்ணப்பத்தின் மீது நடைபெறுகிற வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்திலே நடக்கக் கூடாது. அது வேறு நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அது தாக்கல் செய்யப்பட்ட நாளில், அதை பதிவுக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்துக்கு மாறாக, அதன் பிறகு இதுகுறித்து இரண்டு வார காலத்திற்குள் மத்திய அரசும், மாநில அரசும், சாந்தனும், முருகனும், பேரறிவாளனும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
என்ன காரணத்திற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே விசாரிக்கப்படக் கூடாது?.
கரிய மேகங்கள் வானத்தில் முற்றுகை போட்டிருக்கின்றன. ஆகாயத்தை பார்த்தால் நட்சத்திரங்கள் எவையுமே கண்களிலே படவில்லை. பெரு மழை கொட்டக் கூடும். இடியும் மின்னலும் வின்னிலே பாயக் கூடும் என்று இன்று பகலில் வானிலை ஆய்வு அறிவிப்பாளர் அறிவித்ததை தொலைக்காட்சிகள் வெளியிட்டன. ஆகவே இடியும், மின்னலும், பெருங்காற்றும் சூழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டிய பலர் கூட வராமல் இருக்கலாம். ஆனால் இந்தக் கூட்டம் முக்கியமான காலக்கட்டத்தில் நடக்கின்ற கூட்டம். இங்கே மத்திய அரசின் உளவுப் பிரிவினர் வந்திருக்கிறார்கள். சாதாரணமாகவே வருவார்கள்.
இது பெரியார் திராவிடர் கழகம் நடத்துகின்ற கூட்டம். வில்லங்க பார்ட்டி பூரா இங்கே வந்திருக்கு. மத்திய அரசின் உளவுத்துறை. அதிலும் தமிழ் உணர்வுள்ள எத்தனையோ அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். டெல்லியில் இருந்து இயங்குகின்ற ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகிற செய்தியாளர்கள் வந்திருக்கிறார்கள். தமிழத்திலே இருக்கின்ற ஊடங்கள் ஒன்றிரண்டுகளை தவிர இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்திகளை தருகிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நஞ்சை கக்குவதற்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் டெல்லியிலே துடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான நேரத்தில் நான் கேட்கிறேன், மத்திய அரசை கேட்கிறேன். பொங்கி வருகிற ஆத்திரத்தையெல்லாம் நான் கொட்டுவதற்கு தயாராக இல்லை. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நாங்கள் கேட்கிறோம்.
மத்திய அரசே, இந்த வழக்கை பதிவு செய்தது யார்?. சென்னை உயர் நீதிமன்றத்திலே விசாரிக்கப்படக் கூடாது என்று ஒரு மனுவை இந்த தமிழத்தில் தலைநகர் சென்னையில் இருக்கின்ற ஒரு நபரின் பெயரில், அங்கு இருக்கிற ஒரு வழக்கிறிஞர் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறதே, இந்த வழக்கை தொடுத்தன் பின்னணி என்ன?. யார் அதற்கு பின்னாலே மறைந்திருப்பவர்கள். ஒரு பேரவையின் பெயரால் வந்திருக்கலாம். அவர்களுக்கு தொடர்பில்லை என்றால் வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும். இதன் பின்னணியில் என்ன காரணம்?.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பதட்டம் நிலவியதாம். கொந்தளிப்பு நிலவியதாம். விசாரணை ஒழுங்காக நடத்த முடியாதாம். நீதிபதிகள் நிர்பந்தத்துக்கு ஆளாகி விடுவார்களாம். எனவே இந்த வழக்கை இங்கே விசாரிக்கக் கூடாதாம். இப்படி ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததையடுத்து அதனுடைய கருத்துக்களை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
நான் கேட்கிறேன். அத்தனை ஆயிரம் பேர் திரண்டிருந்த உயர் நீதிமன்றத்தில் கலவரம் நடந்ததா?, கூச்சல் நடந்ததா?. சொல்லட்டும் மத்திய அரசுக்கு உளவுத்துறை. நிசப்தம் நிலவியது. நிசப்தம் நிலவிய வேளையில் வழக்கறிஞர்கள் வாதங்களை எடுத்து வைத்தார்களே, நீதிபதிகளுக்கு முன்னால் இப்படி ஒரு காட்சியை எங்காவது பார்க்க முடியுமா?. கொந்தளிக்கிறது உள்ளம்.
ஆவேச உணர்வு இருந்தால் கூட நீதிமன்றத்தில் சகோதர சகோதரிகள் கட்டுப்பாட்டை காப்பாற்றவில்லையா?. இதற்கு மாறுபட்ட கருத்துடையவர்களும் அங்கே உலவினார்களே. இந்த மூன்று பேர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கின்றபோது, அதற்கு மாறுபட்ட கருத்துக்கொண்ட கட்சியினர் ஓரிருவர் தமிழகத்திலே பேசி வருகிறார்களே அவர்களை சார்ந்தவர்களும் அந்த நீதிமன்ற வளாகத்திலே உலவினார்களே வழக்கறிஞர்களாக. ஏதாவது அமளி நடந்ததா?.
அப்படியென்றால் என்ன நோக்கம்?. சென்னை உயர் நீதிமன்றம் தூக்கு கயிற்றை நிரந்தரமாக அறுத்துவிடும் மூவருக்கும் என்ற எண்ணத்தினாலா? என்றார் வைகோ.
எங்கள் கட்சி மகிழ்ச்சி திமுக... அது தான் மதிமுக-நாஞ்சில் சம்பத்
சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ். (ஓ.பன்னீர்செல்வம்) ஒண்ணுக்குப் போவதற்காக எழுந்து சென்றால் கூட, வெளிநடப்பு செய்கிறார் என்று எழுந்து சென்றோம். நரகத்திற்கு போனால் கூட வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி, அந்த ஆணழகனைக்காட்டி (விஜய்காந்த்) எங்களை அதிமுக வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தது. அதனால் ஒதுங்கிக் கொண்டோம் என்று மதிமுக கொள்கை பரப்புசெயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
பேரறிஞர் அண்ணா 103வது பிறந்தநாளையட்டி சில நாட்களுக்கு முன் நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடந்தது. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், அச்சம் தீர்க்கிற ஆணிவேர். மிச்சம் இருக்கிற தமிழர்களின் கடைசி நம்பிக்கை. என் உடல் இயக்கும் நல்லுயிர் வைகோ நடத்துகின்ற மகாநாட்டில் புலி இல்லாமல் இருப்பதா? என்று நினைத்து இங்கே நிஜ புலியே வந்தது மாதிரி சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள். பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.
உங்கள் (வைகோ) தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் 'அம்மா'வுடன் (அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன்) கூட்டணி வைத்தீர்கள். என் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நான் 'அம்மா' என்று சொன்னேன். என்னைப் பெற்ற அம்மா கூட நான் இப்படி பேசி வந்ததற்கு மனம் வருந்தினார்.
அந்த கட்சிக்கு நாங்கள் எப்படியெல்லாம் உழைத்தோம். சட்டமன்றத்திலே அந்த கட்சி எப்போது வெளிநடப்பு செய்தாலும் அவர்களின் கருத்துக்கு ஒத்துப்போய் வெளிநடப்பு செய்தோம். சட்டமன்ற அவை நேரத்திலே ஓ.பி.எஸ். (ஓ.பன்னீர்செல்வம்) ஒண்ணுக்குப் போவதற்காக எழுந்து சென்றால் கூட, வெளிநடப்பு செய்கிறார் என்று எழுந்து சென்றோம்.
அப்படியெல்லாம் உழைத்த எங்களுக்கு மதிப்பு இல்லை. நரகத்திற்கு போனால் கூட வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி, அந்த ஆணழகனைக்காட்டி (விஜய்காந்த்) எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள். அதனால் ஒதுங்கிக் கொண்டோம்.
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்; துளை செல்லும் காற்று இசையாதல் அதிசயம் என்று அண்ணன் வைரமுத்து எழுதினார். எங்கள் கட்சியும் அதிசயம்தான். சட்டமன்ற தேர்தலிலே போட்டியிடாமல் ஒரு கட்சி நடைபோடுகிறது. அந்த அதிசயக் கட்சி எங்கள் கட்சி.
ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றார்கள். எங்கள் பிள்ளைகளை இரண்டு மாதங்களாக படிக்கவிடவில்லையே. சமச்சீர் கல்வியில் அப்படி என்ன கோபம்?. சரி, திருவள்ளுவர் மீது அப்படி என்ன கோபம். அதை மறைக்கிறீர்கள். அதுவும் பச்சை ஸ்டிக்கரை வைத்து.
முக்கிய தலைவர்களின் படங்களையெல்லாம் கிழித்து எறிந்தீர்கள். இதுதான் படிச்சிக் கிழிப்பதா? கலைஞர் கொண்டு வந்ததையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்றால் கலைஞர் நடத்தி வைத்தை கல்யாணங்களையெல்லாம் ரத்து செய்துவிடச் சொல்லுவீர்களா?.
திமுகவில் இப்போது யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் கட்சி மகிழ்ச்சி திமுக.
2016 எங்களது இலக்கு; அப்போது முடிப்போம் பலரது கணக்கு என்றார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications