அனல் பறக்கும் பிரசாரம்: உச்சகட்ட தேர்தல் ஜுரத்தில் நெல்லை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கட்சித் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில வார்டுகளில் கட்சி வேட்பாளர்களை மிஞ்சும் வகையில் சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முக்கிய கட்சித் தலைவர்கள் முற்றுகையிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தனர்.
இன்று சிவகிரி பகுதியில் தா. பாண்டியன் தொடர்ந்து பிரசாரம் செய்யவுள்ளார். 11, 12 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் நல்லக்கண்ணுவும், 13, 14 தேதிகளில் மாநில துணைச்செயலாளர் பழனிச்சாமியும் பிரசாரம் செய்கின்றனர்.
நாளை நெல்லை மாநகரம், 12ம் தேதி நெல்லை மாவட்டப் பகுதிகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நாளை நெல்லை மாவட்டத்தில் அதிமுக அணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார்.
முக்கிய தலைவர்கள் பிரசாரத்தால் நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரசார களம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்களின் போட்டி பிரசாரத்தால் மோதல், தகராறு நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நாள் நெருங்கும் சூழ்நிலையில் வேட்பாளர்களின் பிரசாரம் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications