இம்மானுவேல் அடிகளாரை திருப்பி அனுப்பியது அக்கிரமம்: நாம் தமிழர் கட்சி கண்டனம்
சென்னை: சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளாரை திருப்பி அனுப்பியதற்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத் தமிழ் மக்களின் இன்னலைத் துடைத்தவர். உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்பவர், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார்.
அவரை சென்னை விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காமல் மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளது மனிதாபிமானமற்ற, சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்.
77 வயதான மதிப்புமிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை இந்திய மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை (Multiple Entry Visa) இம்மானுவேல் அடிகளார் வைத்திருந்தபோதும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல், வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது இந்தியக் குடியேற்றத் துறை.
தமிழ் மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட நோக்குடன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியக் குடியேற்றத் துறை தொடர்ந்து செயல்ப்பட்டு வருகிறது.
ஈழத் தமிழர்கள் ஒன்றே முக்கால் லட்சம் பேரை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை உலக நாடுகள் தூற்றுகின்றன. நமது நாட்டு மீனவர்கள் 540 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர், இன்றளவும் நடுக்கடலி்ல் வைத்து தாக்கப்படுகின்றனர்.
ஆனால் இந்திய மத்திய அரசோ ராஜபக்சேவிற்கு அழைப்பு விடுத்து, சிவப்புக் கம்பளம் விரித்து, அரசு விருந்தினராக வைத்துக் கொண்டாடி புளங்காகிதம் அடைகிறது.
அதே நேரத்தில் கடும் துயரத்தில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழினத்திற்கு பெருமனது கொண்டு தொண்டு செய்து வரும் மதிப்புமிக்கப் பெருமகனார் இம்மானுவேல் அடிகளார் போன்றவர்களை அவமதித்து திருப்பி அனுப்பி வைக்கிறது.
தன்னை ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவிற்கு சற்றும் பொருந்ததாத, நாகரீகமற்ற நடவடிக்கைகளாகும் இது.
ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சேவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை, தமிழினத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும்.
எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும்.
சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்தது போல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications