கடைகளுக்கு 'சீல்' வைப்பை எதிர்த்து தி.நகர் வியாபாரிகள் நாளை கடையடைப்பு

இதனிடையே சிஎம்டிஏ வின் தடையை அடுத்து சென்னையில் கட்டப்பட்டு வந்த இரண்டு பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்களின் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை கணக்கெடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை எடுக்கப்பட்ட பட்டியல்படி 1 லட்சத்து 15 ஆயிரம் கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தற்போது கட்டிட உரிமையாளர்ளுக்கு நோட்டீசு அனுப்பி வருகிறார்கள். இந்த நோட்டீசுக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர்கள் பதில் அளித்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
32 கடைகளுக்கு சீல்
சென்னை தியாகராய நகரில் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களில் 25 கட்டிடங்களுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள 100 கடைகள் 10 நாட்களாக மூடிக் கிடக்கின்றன. பிற கட்டட உரிமையாளர்கள் சிட்டி சிவில் கோர்ட்டில் இடைக்கால தடை வாங்கி உள்ளதால் அந்த கடைகளுக்கு இன்னும் சீல் வைக்கப்படவில்லை.
'லலிதா'வுக்கு ஆபத்து!
இந்த நிலையில் தியாகராயநகரில் மேலும் 37 ஜவுளி, நகைக் கடைகளுக்கான காலக்கெடு வருகிற 16-ந் தேதிக்குள் முடிகிறது. நோட்டீஸ்களுக்கு உரிய பதில் தராத பட்சத்தில் 17-ந்தேதி சீல் வைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகும்.
லலிதா ஜூவல்லரி உள்ளிட்ட கடைகள் இந்த லேட்டஸ்ட் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதாம். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணி நடைபெறும். என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடைகளை அடைக்க முடிவு
அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் தியாக ராயநகர் உஸ்மான் ரோடு, ரெங்கநாதன் தெருவில் கடை வைத்திருக்கும் பிரபல ஜவுளி, நகைகடைக்காரர்கள் பதட்டம் அடைந்த நிலையில் உள்ளனர்.
வணிகர் சங்கம் மூலம் பிரச்சினையை எதிர் கொள்வதா? அல்லது தனித் தனியாக யாரையாவது அணுகி பிரச்சினையை சமாளிக்கலாமா? என்று ஆலோசித்து வருகின்றனர். பெரிய கடைக்காரர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் இந்த பிரச்சினை இன்னும் முடியாமல் உள்ளதாக கூறும் வியாபாரிகள் வியாழக்கிழமையன்று கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 நட்சத்திர ஹோட்டல்களுக்கு தடை
இதனிடையே சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு நட்சத்திர ஹோட்டகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் கட்டுமானப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.
கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் 300 அறைகளுடன் கூடிய லீலா வின்சர் என்ற நட்சத்திர ஹோட்டலும், 250 அறைகளுடன் கூடிய வைஸ்ராய் என்ற ஹோட்டலும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களை கவரும் விதத்தில் இந்த இரண்டு ஹோட்டல்களும் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டு வருகின்றன.
இவை கடற்கரை ஒழுங்குமுறை விதிமுறைகளுக்குப் புறம்பாக உள்ளது என சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கடலோரம் கட்டிவருவதால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்கத்திடம் அனுமதி பெறவும் சிஎம்டிஏ அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கமருத்துள்ள அதிகாரிகள் கட்டட கட்டுமானப்பணிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் ஹோட்டல் கட்டுமானப்பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications