நுண்ணீர் பாசனம்: விவசாயிகளுக்கு மானியம்-ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நுண்ணீர் பாசனத்துக்காக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருவாயை மூன்று மடங்கு அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் குறிக்கோள் ஆகும்.

சாகுபடிக்கு நீர் மிக இன்றியமையாதது. தமிழகத்தின் நிகர பாசனப் பரப்பு 58 விழுக்காடாக மட்டுமே உள்ளது. மாநிலத்தில் உள்ள மேற்பரப்பு பாசன ஆதாரத்தில் 95 விழுக்காடும், நிலத்தடி நீர் ஆதாரத்தில் 85 விழுக்காடும் பயன்படுத்தப்பட்ட நிலையில், நுண்ணீர் பாசனப் பரப்பினை அதிகரிப்பதன் மூலமே நீர்பயன்பாட்டின் திறனை மேம்படுத்த இயலும்.

பழைய நீர்ப்பாசன முறைகளில் நீர் பயன்பாட்டுத் திறன் மிகவும் குறைவு. நுண்ணீர் பாசனத் திட்டமான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் மூலம் பாசன நீரை திறம்பட பயன்படுத்தலாம்.

இதன் மூலம் பயிரின் உற்பத்தித் திறன் மற்றும் விளைபொருட்களின் தரத்தினை மேம்படுத்த இயலும். பாசனநீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் மற்றும் பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்தல் போன்ற முக்கிய நோக்கங்களைக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோதே, நுண்ணீர் பாசன உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நீரைச் சேமித்து நீர் பயன்பாட்டினை திறம்பட நிர்வகிக்கவும், நுண்ணீர் பாசன முறைகளை விவசாயிகளிடையே விரிவாக்கம் செய்யவும், அதை பெரும் இயக்கமாக நடத்தவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

பண்ணை அளவில் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்க நுண்ணீர் பாசனம் ஒரு முக்கிய தேவை என்பதால் சிறு, குறு விவசாயிகள் இந்த பாசன முறையை அதிக அளவில் பயன்படுத்துவதற்காக அவர்களை ஊக்குவிக்கும் வகை யில் அவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மானியத்தினை அதிகரிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனம் அமைத்து பயிரிடும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்க முதமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இத்திட்டத்தின்படி சிறு, குறு விவசாயிகள் 60,000 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன வசதி அமைத்திட 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகள் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன வசதி அமைத்திட 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும்.

பயிர் சாகுபடிக்கு போதுமான நீர் வசதியுடன் நீர் இறைக்கும் அமைப்பும் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெற குறு விவசாயிகள் 2.50 ஏக்கர் அளவுக்கும், சிறு விவசாயிகள் 5.00 ஏக்கர் அளவுக்கும் மானியம் பெறலாம். குத்தகை அடிப்படையில் பயிர் செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து நுண்ணீர் பாசன வசதி அமைத்தும் மானியத்தினை பெறலாம். நுண்ணீர் பாசனம் அமைக்க ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 43,816 ரூபாய் வழங்கப்படும். மேலும், அதிக நீர் வழங்கக்கூடிய தெளிப்பான் அல்லது சிறு தெளிப்பான் அல்லது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய தெளிப்பு நீர் பாசன அமைப்புகளுக்கும் மானியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையினால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன அமைப்பு தயாரிப்பு நிறுவனங்களை விவசாயிகள் தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ள இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், மானியத்தில் பெறும் நுண்ணீர் பாசன அமைப்பு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக விவசாயி, நிறுவனம் மற்றும் திட்டம் செயல்படுத்தும் முகமைகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

விவசாயிகள் விண்ணப்பித்த பத்து நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு முகமையால் தகவல் தெரிவிக்கப்பட்டு, பாசன அமைப்பினை நிறுவும் ஆணை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுவிடும்.

பின்னர் விவசாயிகள் 7 நாட்களுக்குள் நிலம் தயாரிப்பு பணியினை முடிக்கவேண்டும். அதன் பின்னர் 15 நாட்களுக்குள் நுண்ணீர் பாசன தயாரிப்பு நிறுவனம், நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவிடவேண்டும்.

இவ்வாறான கால அவகாசம் நிர்ணயித்துள்ளதால், நுண்ணீர் பாசன அமைப்பு விரைந்து நிறுவிட இயலும்.
பாசன அமைப்பு நிறுவியபின் மூன்றாண்டு காலத்திற்குள் பழுது அல்லது குறை ஏதும் ஏற்பட்டால் அதனை சம்பந்தப்பட்ட நிறுவனமே இலவசமாக சரி செய்து தரவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில நுண்ணீர் பாசன குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சேவை மையத்தினை நிறுவவேண்டும்.

இந்த பாசன அமைப்பு நிறுவியபின் ஏற்படும் குறைகளை தெரிவிக்க சேவை அட்டை முறை அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் நிறுவனத்தின் பணி கண்காணிக்கப்படும். நுண்ணீர் பாசன அமைப்பு பராமரித்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும். மேலும், இதன் இயக்கம் மற்றும் பராமரித்தல் தொடர்பான விவரங்கள் தமிழில் அச்சிடப்பட்டு ஒரு கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிடப்பட்டுள்ள இந்த நுண்ணீர் பாசன மானிய திட்டத்தின் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெரும் பயன் அடைவார்கள். மேலும், நுண்ணீர் பாசன முறையை பின்பற்றும் நிலங்களின் பரப்பு அதிகரிப்பதன் வாயிலாக அதிக அளவு மகசூல் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+