இலவச மிக்ஸி வழங்குவதில் சிக்கல்- எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை முற்றுகையிட்ட மக்கள்
நெல்லை: நெல்லை மாநகராட்சியின் 12வது வார்டு பகுதியில் இலவச மிக்ஸி வழங்கும் விழா நடந்தது. இதில் மிக்ஸி, கிரைண்டர் கிடைக்காதவர்கள் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டனர்.
தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. நேற்று நெல்லை மாநகராட்சி 12வது வார்டு பகுதியான சாந்தி நகர் போலீஸ் காலனி சமுதாய நலக்கூடத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மேயர் விஜிலா, கவுன்சிலர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக 600 பேருக்கு வழங்குவதற்காக டோக்கன் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 300 பேருக்கு மட்டுமே மிக்ஸி, கிரைண்டர் வந்திருந்தது. அவர்களுக்கு மட்டுமே மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. அவற்றை வழங்கிவிட்டு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. புறப்பட்டார். மிக்ஸி, கிரைண்டர் கிடைக்காதவர்கள் தங்களுக்கு வழங்கி விட்டு செல்லுங்கள் என்று அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அவர் பின்னர் வழங்கப்படும் என்றார்.
இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.வை அனுப்பி வைத்தனர். பின்னர் பொது மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து 12வார்டு கவுன்சிலர் விஜயன் கூறியதாவது,
இந்த வார்டில் 2,300 ரேஷன் கார்டுகள் உள்ளன. பெரும்பாலானோர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். முதல் கட்டமாக 930 பேருக்கு மிக்ஸி, கிரைண்டர் வழங்குவதாக கூறிவிட்டு 300 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. விடுபட்ட அனைவருக்கும் உடனே பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications