மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்- வாலிபர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தலைமை கூடுதல் இயக்குனர் ராஜன் உத்தரவின் பேரில் தனிப்படையினர், விமான நிலைய சரக்கு பிரிவில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து மலேசியாவுக்கு அனுப்ப வந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மலேசியாவுக்கு 1,000 சேலைகள் அனுப்பும் பார்சல் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பார்சலை அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.
அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகளுக்கு நடுவே, 25 கிலோ எடை கொண்ட கேட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பார்சலை மலேசியாவுக்கு அனுப்ப முயன்ற சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த பசீர் அகமது(28) கைது செய்யப்பட்டார். கடத்தப்பட இருந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்தல்:
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய ஒருவர், இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானப் பயணிகளிடம் வழக்கமான சோதனை நடத்திய போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு நபரிடம் 50 கிலோ என்சால், 150 ஹான்ஸ் பாக்கெட்கள், 1000 குப்பிகள் (10 கிராம் அளவுள்ள) புகையிலை தூள் உள்ளிட்ட பொருட்களை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த தகவலை இலங்கை போலீசார் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
