For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் வீடுகளில் இருந்து 800 ஆவணங்கள் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் பத

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் வீடுகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது 800 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி சோதனை நடத்தினார்கள். பணி நியமனம் செய்ய அவர்கள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய செல்லமுத்து தலைவராகவும், மற்ற 13 பேர் உறுப்பினராகவும் இருந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட பணிநியமனம் அனைத்தையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களும், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அவர்களின் உத்தரவின்படி செல்லமுத்து பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், பணி நியமனம், தேர்வு நடத்துவது, மார்க் போடுவதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர்கள் தலையிட முடியாது. எனவே நாங்கள் ஊழல் செய்ய அதில் வாய்ப்பு மிகமிகக் குறைவு' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் புலனாய்வு பிரிவு துணை சூப்பிரண்டு எஸ்.எம்.முகமது இக்பால் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் மீது குற்ற சதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், அரசு ஊழியர்களை பணியாற்றவிடாமல் தடுத்தல், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் கேட்ட ஆவணங்களை தர மறுத்தல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

அவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம். அங்கிருந்த ஹால் டிக்கெட், நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்கள், பதிவு எண் அடங்கிய டைரிகள், வெளியிடப்படாத தேர்வு முடிவுகள், வரவு -செலவு ரசீதுகள், அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்கள், மற்ற முக்கியஸ்தர்களின் பரிந்துரைக் கடிதங்கள் உள்பட பல ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

உறுப்பினர் ஜி.சண்முகம் முருகன் வீட்டில் இருந்து ரூ.26,53,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அவரது சகோதரரும் ஓய்வு பெற்ற ஐ.ஜி.யுமான ஜி.துரைராஜிடம் இருந்தும் பெருந்தொகை ஒன்றை கைப்பற்றியுள்ளோம்.

மற்றொரு உறுப்பினர் கே.கே.ராஜாவின் வீட்டில் இருந்து ரூ.9.60 லட்சம் மற்றும் 23 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை கைப்பற்றினோம். மேலும் அவர்களிடம் இருந்து உதவி மருத்துவர் தேர்வுக்கான விடைத்தாள், 2ம் நிலை ஆய்வாளர் தேர்வுக்கான விடைத்தாள் போன்றவற்றையும் கைப்பற்றினோம்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் அவர்களிடம் இருந்து 800 ஆவணங்களை அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து கைப்பற்றி இருக்கிறோம். இவற்றில் பெரும்பாலான ஆவணங்கள், அவர்கள் செய்த குற்றத்துக்கு தொடர்புடையவையாக உள்ளன.

டி.என்.பி.எஸ்.சி.யில் இவர்கள் பணியாற்றிய காலகட்டத்தில் செய்யப்பட்ட அனைத்து நியமனங்களிலும் ஊழல் நடந்ததா? என்பதை இப்போது நாங்கள் கூற முடியாது. சிறப்பு புலன் விசாரணை பிரிவுகளை அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில்தான், இவர்கள் பணியாற்றிய காலகட்டத்தில் நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் ஊழல் நடந்ததா? என்பது தெரியவரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DVAC police have filed a petition in the Chennai high court telling that they have confiscated 800 documents from TNPSC chairman Sellamuthu and 13 members' houses when they conducted raid there. They have also confiscated a large sum of money during the raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X