'ஆருயிர் நண்பர் தென்னன் மறைந்தார்- எனக்கு யார் ஆறுதல் கூறுவது?'- கருணாநிதி வேதனை!

கருணாநிதி திருவாரூரில் வளர்ந்தபோது அவரது நண்பராக திகழ்ந்தவர் தென்னன். திருவாரூர் வீதிகளில் இருவரும் ஓடித் திரிந்து விளையாடியவர்கள். இவர்களது கால் படாத இடமே திருவாரூரில் இல்லை எனலாம். குறிப்பாக கீழ மாட வீதிதான் இவர்களின் விளையாட்டு மைதானமாக திகழ்ந்தது.
இந்த நிலையில், தென்னன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கை:
இன்று என் நண்பனை இழந்து நிற்கிறேன். எனக்கு எத்தனையோ நண்பர்கள் உண்டென்ற போதிலும், ‘‘நண்பன்’’ என்ற தகுதியிலே முதலிடத்தில் வைத்து கருதப்படும் திருவாரூர் தென்னனை இன்று இழந்து விட்டேன்.
எத்தனையோ நினைவுகள். அந்த நினைவுகளின் பின்னணியில், எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள். எதை நினைப்பது, எதை எழுதுவது? பள்ளி இறுதி வகுப்பில் தேர்வில் வெற்றி பெறாத நான், வீட்டில் இருந்து புறப்பட்டு யாருக்கும் தெரியாமல் தோப்புத் துறை சென்று அசன் அப்துல் காதர் என்ற நண்பர் வீட்டிலே தங்கியிருந்த போது, வீட்டாரை எண்ணி, ‘‘நான் இங்குதான் இருக்கிறேன். இதை என் வீட்டாருக்கு தெரிவித்து, அவர்களை கவலைப்படாமல் இருக்க செய்க’’ என்றொரு கடிதத்தை எழுதி அனுப்பினேன். நண்பன் தென்னனுக்குதான் எழுதினேன்.
‘‘கருணாநிதியை தேடி கொண்டு நான் தோப்பு துறைக்கு போனேன். அதற்குள், அவன் அங்கு முகாம் செய்திருந்த ராணுவத்தில் சேர தன் பெயரை கொடுத்து விட்டான். எவ்வளவோ சொன்னேன் கேட்கவில்லை. பிறகு ஏழெட்டு நண்பர்களை விட்டு கருணாநிதி மனதை மாற்ற செய்து திரும்ப அழைத்து வந்தேன்’’ என்ற கற்பனை கதையை உண்மை போல என் வீட்டாரிடம் கூறி, ‘‘இதை விட மேலாக பொய்களை எல்லாம் திறமையாக சொல்ல கூடிய ஆற்றல் பெற்றவன் என் நண்பன்’’ என்று ‘‘நெஞ்சுக்கு நீதி’’யிலே நான் எழுதியிருக்கிறேன். அந்த ஆரூயிர் நண்பன், தென்னன்தான்.
சிதம்பரத்தில் வருணாசிரம மாநாடு நடக்க இருந்தது. அதை வன்மையாக கண்டித்து, 5.10.1944ல் ‘‘முரசொலி’’ துண்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த துண்டு அறிக்கையின் நிரந்தர எழுத்தாளன் நான்தான். வெளியிடும் செயலாளர் தென்னன். பொருளாளர் டி.எஸ்.கோபால். என் நிரந்தர நண்பன், முதலில் ‘‘முரசொலி’’ வளர அரும்பாடுபட்ட திருவாரூர் தென்னனை இன்று நான் இழந்து விட்டேன்.
மூன்று திங்களுக்கு முன் 6.8.2011 அன்று திருவாரூரில் படுத்த படுக்கையாக இருந்த தென்னனை நான் சென்று சந்தித்தேன். அவரை பார்க்க நான் சென்ற போது என்னை பார்த்தவாறே இருந்தார். அன்று இருவருமே அதிகமாக பேசி கொள்ளவில்லை. இருவருக்கும் எத்தனையோ நினைவுகள். ‘‘உடம்பு ரொம்ப முடியலிங்க’’ என்றார். இன்று அவர் மறைந்து விட்டாராம். ஆம்; என் நண்பன் வாழ்ந்த நாள் முழுவதும் எனது நிழலாகவே நெருங்கியிருந்த திருவாரூர் தென்னன் நெடுந்தூரம் சென்று மறைந்து விட்டாராம். எனக்கு யார் ஆறுதல் கூறுவது? என்று உருக்கமாக கூறியுள்ளார் கருணாநிதி.
தென்னன் திருவாரூர் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications