For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புயலுக்கு முந்தைய 'டிரெய்லர்': இரவு முதல் பலத்த காற்றுடன் ஆங்காங்கே மழை!

Google Oneindia Tamil News

சென்னை: தானே புயல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

தானே புயல் தமிழக கரையை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. புயல் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் கரையைக் கடக்கும்போது அது வலுவிழந்த நிலையில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் ஆங்காங்கே பரவலாக மழையும் பெய்து வருகிறது. மழை இதுவரை பெரிய அளவில் இல்லை. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாரல் மழை போல உள்ளது. அதேசமயம், காற்று பலமாக வீசுகிறது.

காற்றும், லேசான சாரலமுமாக சென்னை மாநகரம் படு குளிர்ச்சியாக காணப்படுகிறது. இதே நிலைதான் புதுவை உள்ளிட்ட இதர கடலோரப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

சென்னையில் கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மெரீனா கடற்கரையில் நேற்று கடல் பல அடி தூரத்திற்கு உள்ளேறி வந்ததால் இது கடற்கரையா அல்லது கடலின் விரிவாக்கமா என்று மக்கள் குழம்பிப் போயினர்.

நேற்று அதிகாலை நேரத்தில் சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவொற்றிïர், எண்ணூர் கடற்பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் கொந்தளித்த வண்ணம் இருந்தது.

கரையை தாண்டி அலையின் வேகம் இருந்ததால் கடற்கரை மணலில் 100 அடி தூரத்திற்கு கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரை மணல் பகுதி கடல் நீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது. கடலுக்கும் இந்த தற்காலிக ஏரிக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி இருந்து, பார்ப்பதற்கு முகத்துவாரம் போல் காட்சியளித்தது.

அதே நேரத்தில் எச்சரிக்கை விட வேண்டிய கடலோர காவல்படையினர், குதிரைப்படை ரோந்து போலீசார் யாரும் மெரினா கடற்கரை பகுதியில் இல்லாததால் பலரும் சீற்றத்தை பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி குளித்தனர். இந்த நேரத்தில் கணவருடன் சேர்ந்து கடலில் இறங்கி குளித்த இளம் பெண் ஒருவர் கடல் அலையில் சிக்கிக்கொண்டார். உயிர் பிழைக்க போராடிய அவரை அங்கிருந்த மீனவர் உதவியுடன், அவரின் கணவர் மீட்டார்.

கடல் அலை சீற்றம் குறித்து மீனவர்கள் கூறும்போது, 2004-க்கு பிறகு இப்போது தான் மெரினா கடலில் இப்படியொரு அலையை பார்க்கிறோம். கரையில் இருந்து 100 அடிக்கு மேல் கடல் நீர் புகுந்து இருக்கிறது. தொடர்ந்து கடல் கொந்தளிப்பாக இருக்கிறது. இதனால் நாங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. எங்களால் முடிந்தளவு பொது மக்கள் கடலில் இறங்கி குளிக்க நாங்கள் எச்சரிக்கை செய்து வருகிறோம். இருப்பினும் அவர்கள் எங்கள் பேச்சை கேட்பதே இல்லை என்றனர்.

திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. கடலில் சுமார் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் தோன்றி கடல் அரிப்பு தடுப்புச் சுவரைத் தாண்டி கடல் நீர் சாலையிலும், கடலோரத்தில் உள்ள வீடுகளிலும் புகுந்தது.

இதனால் அவர்கள் வீடுகளைப் பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட அன்னை சிவகாமி நகர், காசிகோவில் குப்பம், திருவொற்றியூர் குப்பம், சின்னகுப்பம், பெரியகுப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் உள்ளிட்டோர் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

அவர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்கள். மேலும் புயல் கரையைக் கடக்கும் வரை கடல் கரையோர வீடுகளில் யாரும் தங்க வேண்டாம் என்றும், அவர்கள் சமுதாயக் கூடங்களில் தங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

நாகையில் மின்கம்பங்கள் விழுந்தன

கடந்த 3 நாட்களாக நாகையிலும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் சுமார் 10 அடி உயரத்துக்குமேல் ராட்சத அலைகள் எழுந்தன. கடற்கரையையொட்டி போடப்பட்டுள்ள கடல் அரிப்பு தடுப்பு கற்களில் அலைகள் ஆக்ரோசமாக மோதின. இந்த நிலையில் நேற்று நாகையில் ஏற்பட்ட கடும் கடல் சீற்றம் காரணமாக அக்கரைப்பேட்டை வடக்குத்தெரு பகுதியிலிருந்து தெற்குதெரு வரையில் 1 ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டது.

இதில் மேற்கண்ட பகுதியில் இருந்த 11 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அச்சம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறினார்கள். அருகில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் உடனடியாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

நாகை துறைமுகத்தில் புயல் வலுவடைந்ததை அடுத்து நேற்றுமுன்தினம் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தானே புயல் காரணமாக கடல் வழக்கத்தை விட சீற்றமாகவே காணப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் மீன்பிடி படகுகள் அனைத்தும் 5-வது நாளாக நேற்றும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

கடல் சீற்றமும், உள்வாங்குதலும்

கன்னியாகுமரியில் நேற்று ஒரு புறம் கடலில் சீற்றம் ஏற்பட்டது. மற்றொரு பக்கம் கடல் உள்வாங்கியது.

கடந்த 26-ந் தேதி சுனாமி நினைவு தினத்தின் போது அலைகள் இல்லாமல் கடல் அமைதியாக காணப்பட்டது. நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடல் உள்வாங்கியது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் உள்ள பாறைகள் எல்லாம் வெளியே தெரிந்தன

நேற்று 2-வது நாளாக திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல்பகுதி அமைதியாக இருந்தது. மேலும் அப்பகுதியில் 10 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. அப்பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தன. இதனால் திருவள்ளுவர் சிலை பகுதியிலும் நீர்மட்டம் தாழ்ந்தது. அதனால் நேற்று 2-வது நாளாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ஆனால் கன்னியாகுமரியின் மற்றொரு பகுதியான இந்திய பெருங்கடலும், அரபிக்கடலும் ஆக்ரோஷமாக காணப்பட்டன. அங்கு ராட்சத அலைகள் எழுந்தன.

English summary
Strong winds with rain is slamming coastal towns of north TN due to cyclone Thane from yesterday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X