அணைக்காக உயிர் நீத்த டிரைவர் உடல் தகனம்: வைகோ, பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
தேனி: முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தீக்குளித்து உயிர் நீத்த வேன் டிரைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை சாலை சுந்தரம் சேர்வை லைன் பகுதியில் வசித்தவர் சண்முக சுந்தரம். அவருடைய மனைவி சண்முகத்தாய். அவர்களுக்கு சீனிவாசன், சரவணன், பாலு, ஜெயப்பிரகாஷ் நாராயணன்(31) என்ற 4 மகன்களும், வசந்தி, சாந்தி, சந்திரா என்ற 3 மகள்களும் உள்ளனர்.
சண்முகசுந்தரம் இப்போது உயிருடன் இல்லை. மேலும் சமீபத்தில் பாலுவும் இறந்துவிட்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. இதனால் ஜெயப்பிரகாஷ் தனது தாயுடன் வசித்து வந்தார். தேனியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்தார். கடந்த மாதம் 19ம் தேதி மாலை 4 மணி அளவில் அவர் தேனி நேரு சிலை உள்ள இடத்திற்கு வந்தார். தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனைத் திறந்து அதில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்தார். அவரது உடலில் தீப்பிடித்தவுடன் வேதனை தாங்காமல் அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தேனி நகர போலீசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தான் தீக்குளித்ததாக தெரிவித்தார். அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இநநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிர் இழந்தார்.
இதையடுத்து நேற்று பிற்பகலில் அவருடைய உடல் தேனி நகர் கம்பம் சாலையில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications