புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திமுக ரூ. 50 லட்சம் உதவி- கருணாநிதி

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதகிளை திமுக தலைவர் கருணாநிதி நேரில் பார்வையிட்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர்.
இன்று மரக்காணம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளைக் கருணாநிதி பார்வையிடுகிறார். பின்னர் திருவாரூர் சென்று தங்கும் அவர் நாளை அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுகிறார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் நிவாரணப் பணிகள் குறித்து மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர். மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு மத்திய அரசை திமுக கேட்டுக் கொள்ளும் என்றார்.
கடலூரில் இன்று முற்பகலில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட கருணாநிதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் கடலூர் உள்ளிட்ட புயல் பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் கட்சியினர் முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். நிவாரண உதவிகளை வழங்க ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
புயல் பாதித்த பகுதிகளில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குத் தாராளமாக நிதியுதவி செய்யுமாறு மத்திய அரசிடம் திமுக எம்.பிக்கள் நேரில் வலியுறுத்துவர் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications