தமிழக நதிகளை இணைக்க மத்திய அரசின் நிதி தேவை-ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் ஓடும் நதிகளை ஒன்றாக இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் நடந்த மாநில நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுக்கான பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் ஓடும் நிதிகளை இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி தேவைப்படுவதாக கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர் கூட்டத்தில் கூறியதாவது,

தமிழகத்தில் முறையான வளர்ச்சிக்கு வழி காட்டும் வகையில் 'விஷன் - 2025' என்ற தொலைநோக்கு திட்டத்தை தயாரித்து உள்ளோம். இதன்மூலம் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு குறிப்பாக உள்கட்டமைப்புகளை அதிகரித்து கொள்ள முடியும்.பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைய விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து, உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும் ஏழைகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் துவக்கி வைத்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்படி, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் முழு செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்கின்றது. இந்த நிலையில் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் காப்பீட்டு திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை மாநில காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அதேபோல கிராமங்களில் நிலமற்ற விவசாயிகளுக்கான 'ஆம் ஆத்மி பீமா யோஜனா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தை மாநில அரசின் உழவர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தலாம்.

மத்திய திட்டங்களுக்கான நிதியை மாநில அரசுகளுக்கு அளிப்பது குறித்து டாக்டர் ரங்கராஜன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளுக்கு தமிழக அரசு முழு ஆதரவு தெரிவிக்கின்றது. இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் தமிழகத்தின் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து சென்னை மாநகராட்சி 3 மடங்கு விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சியி்ல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்தும் வகையில், ரூ.2,500 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

நகர்ப்புற உள்கட்டமைப்புகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தை வழங்கும் வகையில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டம் 2ல் நிதி ஆதாரம் இருக்க வேண்டும். 13வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் தமிழக அரசு, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

எனவே தேசிய சிறுசேமிப்பு நிதி கடனுக்கான வட்டியைக் குறைக்கவும், துறைகள் வாங்கிய கடனுக்கான நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்யவும் கோரிக்கை வைக்க தமிழக அரசுக்கு தகுதி உள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையால், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி தடைப்படுகின்றது. அனல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரி பற்றாக்குறை நிலவுவதால், மின் உற்பத்திக்கு மாற்று வழியை தேட வேண்டியுள்ளது.

குளச்சல் துறைமுகத்தை திரவ இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் எரிசக்தி துறைமுகமாக மாற்ற வேண்டும். அங்கிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயற்கை எரிவாயுவை எடுத்து செல்லும் இணைப்புக் குழாய்கள் ஏற்படுத்த வேண்டும். மேலும் கொச்சியில் இருந்து சேலம், சென்னை வழியாக பெங்களூருக்கு இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் இணைப்பு குழாய்கள் அமைக்க வேண்டும்.

இந்தியாவிலேயே பெரிய தொழிற்நுட்ப பல்கலைக் கழகமாக, தமிழகத்தின் அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகம் உருவாகி வருகின்றது. எனவே இதனை சீர்மிகு தொழிற்நுட்ப பல்கலைக் கழகம் என்று மத்திய அரசு அறிவித்து, வரும் பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும்.

மத்திய அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.200 தரப்படுகின்றது. ஆனால் தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வரும் பட்ஜெட்டில் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் தொகையை ரூ.750 என்று உயர்த்த வேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நதிகள் இணைப்பு திட்டத்தின் முன்னோடியாக தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கப்பட உள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்க மத்திய அரசு முன்வரவில்லை. எனவே தமிழகத்தில் ஓடும் நிதிகளை இணைக்கும் வகையில் மத்திய அரசு நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்.

மதிப்பு கூட்டு வரி, மத்திய விற்பனை வரி மூலம் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டும் என்று பல தருணங்களில் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. நிதி நெருக்கடியில் உள்ள தமிழகத்திற்கு, மதிப்புக் கூட்டு வரி, மத்திய விற்பனை வரி மூலம் ஏற்பட்டுள்ள இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

மேலும் மாநில அரசு நிதி தேவைக்காக பங்குப் பத்திரங்களை வெளியிட்டு வெளிசந்தையில் கடன் வாங்கும் போது, மத்திய அரசு விதிக்கும் நிபந்தனைகள் நியாயமற்றதாக உள்ளன. எனவே சந்தை நிலவரம் மற்றும் தேவைக்கு ஏற்ப நிதியை பெற்று கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+