மீண்டும் எழிலகம் கட்டடத்தில் தீ- ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் வெளியேற்றம்
சென்னை: தீவிபத்தால் பெரும் நாசத்தை சந்தித்துள்ள சென்னை எழிலகம் கட்டடத்தின் 2வது தளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கு ஆய்வில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள 200 ஆண்டு பழமையான வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மேற்கூரை இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி தீயணைப்பு வீரர் அன்பழகன் பலியானார். கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிட சுவர்களை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. எப்போது இடிக்கப்படும் என்பது பற்றிய விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. தீ விபத்து நடந்த அரசு கட்டிடம் விரைவில் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்ட டெண்டர் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபத்தான நிலையில் இருக்கும் எழிலக கட்டிடத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கட்டிடத்தின் உள் அறைகளில் இன்னும் நெருப்பு தணல் காணப்படுவதால் பாதுகாப்புக்காக 2 தீயணைப்பு வாகனங்கள் எழிலக வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இன்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முற்பகல் வாக்கில் அங்குள்ள 2வது தளத்தில் அரைகுறையாக எரிந்த நிலையில் கிடந்த கட்டைகள் திடீரென காற்றின் வேகத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறி வந்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பரவி விடாமல் தடுக்கும் வகையில் தீயணைக்கும் பணிகள் நடந்தன.
இதற்கிடையே, இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள், விடுமுறை முடிந்து நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தனர். எழிலக கட்டிடத்தில் தீ விபத்து நடந்தது பற்றி ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தாலும், தீயின் கோர தாண்டவத்தின் பாதிப்பை நேரில் பார்த்து அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். இவ்வளவு நாளாக அமர்ந்து பணியாற்றிய அலுவலகம் இப்படி எரிந்து போய் விட்டதே என்று அவர்கள் சோகமடைந்தனர்.
அவர்களுக்கு தற்போது தற்காலிகமாக வேறு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் அலுவலக அலுவலர்கள் பட்டினப்பாக்கம் சவுத்கெனால் ரோட்டில் உள்ள தாய்கோ வங்கி அலுவலகத்துக்கும், சமூக நல இயக்கக அலுவலர்கள் சிந்தாதிரிபேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கும், தொழிற்சாலைகளின் ஆய்வுத்துறை அலுவலர்கள் அண்ணா சாலையில் உள்ள அதே துறையின் மற்றொரு கிளை அலுவலகத்திலும், தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கும், தபால் அலுவலக பணியாளர்கள் சென்னை பல்கலைக்கழக கட்டிடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications