நைஜீரிய கப்பலில் தீ: நெல்லை ஊழியர் கதி என்ன?
நெல்லை: நைஜீரிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்து விபத்துகள்ளானது. இந்த கப்பலில் சென்ற நெல்லை ஊழியரின் கதி என்ன என்பதை கண்டறிந்து உண்மை நிலையை தெரிவிக்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் போலீ்ஸ் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
பாளை பெருமாள்புரம் வீட்டு வசதி வாரிய காலனியைச் சேர்ந்த மார்க் தேவதாஸ் குடும்பத்தினர் நெல்லை போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
எனது மகன் ஆல்பர்ட் மனுவேல் தேவதாஸ் நைஜீரிய நாட்டுக்கு சொந்தமான கேஎஸ் என்டவர் என்ற எண்ணெய் கப்பலில் துபாய் கம்பெனி மூலம் டிரில்லராக பணி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 21.12.2011 அன்று சென்னையில் இருந்து துபாய் வழியாக நைஜீரிய நாட்டுக்கு அனுப்பப்பட்டு வேலையில் சேர்க்கப்பட்டார்.
அவருடைய பாஸ்போர்ட் எண் இசட் 2134790. இந்த மாதம் 15ம் தேதி வேலையில் இருந்து ஊர் திரும்ப வேண்டிய ஆல்பர்ட் மனுவேல் தேவதாஸ் இன்னும் வரவில்லை. இந்நிலையில் கடந்த 16ம் தேதி மும்பையில் உள்ள கடல்சார் நிறுவனத்தில் பணிபுரியும் எனது மகள் தாயம்மாளுக்கு துபாய் கம்பெனியில் இருந்து தொலைபேசி மூலம் ஒரு தகவல் வந்ததகாவும், அதில் ஆல்பர்ட் மனுவேல் தேவதாஸ் பணி செய்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து கொண்டிருப்பதாகவும் அவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்பிறகு நாங்களும் அந்த கம்பெனியை தொடர்பு கொண்டபோது கப்பலில் வேலை செய்த 154 பேரில் 152 பேர் மீட்கப்பட்டதாகவும், 2 பேரைக் காணவில்லை என்றும் தெரிவித்தனர். ஆல்பர்ட் மனுவேல் தேவதாசின் கதி என்ன என்று இதுவரை எந்தவித தகவலும் இல்லை. எனது மூத்த மகன் ஆல்பர்ட்டுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். அவரது கதி என்ன என்பது தெரியாமல் அனைவரும் தவித்து வருகிறோம். எனவே எனது மகனின் நிலையை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications