அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடங்கள்: வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்த ஜெ.
சென்னை: தருமபுரி, கோவை, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.45.42 கோடி செலவில் 500 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி புதிய கட்டிடம், கோவை மாவட்டம் அன்னூர் அரசு வட்ட மருத்துவமனையில் ரூ.1.6 கோடியிலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு வட்ட மருத்துவமனையில் ரூ.1.88 கோடியிலும், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
சமயபுரம் (திருச்சி), கொணவட்டம், சுமைதாங்கி, கொரட்டி (வேலூர்), சேந்தநாடு, அம்மாகளத்தூர் (விழுப்புரம), காஞ்சிக்கோவில், மலையப்பாளையம் (ஈரோடு), வடக்குபாளையம், தும்பிவாடி (கரூர்), பேகப்பள்ளி (கிருஷ்ணகிரி), மாதிரவேலூர் (நாகப்பட்டினம்), புளியம்பட்டி (திருப்பூர்), இளம்பலூர் (பெரம்பலூர்), கானப்பாடி (திண்டுக்கல்), தென்மலை (நெல்லை), கல்யாணகுப்பம் (திருவள்ளூர்), ராபூசல் (புதுக்கோட்டை), ஒக்கநாடுகீளையூர் (தஞ்சாவூர்), லூர்தம்மாள்புரம் (தூத்துக்குடி) ஆகிய பகுதிகளில் ரூ.7.71 கோடியில் கட்டப்பட்டுள்ள 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் பழனியப்பன், எஸ்.பி.வேலுமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, வி.எஸ்.விஜய், ஆனந்தன், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி உள்ளிட்டோர் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications