நெல்லையில் அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புளியங்குடியில் இருந்து நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று சுரண்டைக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தில் சுரண்டையைச் சேர்ந்த பயணிகள் சிலர் இருந்தனர். பேருந்து பாம்புகோவில் சந்தை அருகே இரவு சுமார் 10.45 மணிக்கு சென்றபோது திடீர் என்று மர்ம நபர்கள் 5 பேர் அங்கு வந்தனர். உடனே தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டை பேருந்து மீது வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பேருந்தின் முன்பக்க இருக்கைகள் தீப்பிடித்து எரிந்தது. உடனே ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தீயை அணைத்தனர். பின்னர் பயணிகளை அந்த வழியாக வந்த வேனில் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நெல்லை எஸ்பி விஜயேந்திர பிதாரி, புளியங்குடி டி.எஸ்.பி. ஜமீம், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பேருந்து புளியங்குடி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications