மணிப்பூர் தேர்தல்: தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 பேர் பலி
இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது நாகாலாந்து தீவிரவாத அமைப்பினரால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சந்தால் மாவட்டத்தில் வாக்குச் சாவடி நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில் (ஐசக்-மூய்வா) அமைப்பினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. பிற்பகலில் 40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
சந்தால் மாவட்டம் தம்பி என்ற வாக்குச் சாவடியை நாகா தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்றனர். இதையடுத்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இதில் ஒரு ரிசர்வ் படை வீரர், 3 ஊர்க்காவல் படையினர் மற்றும் ஒரு பெண் வாக்காளர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மாநிலம் முழுவதும் உள்ள மொத்தம் 2357 வாக்குச் சாவடிகளில் 1325 பதற்றமானவையாகவும் 872 சாவடிகள் அதிக பதற்றமானவை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மணிப்பூர் தேர்தலுக்கு மட்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 350 துணை ராணுப் படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது முதல் தொடர்ந்து பல வன்முறைச் சம்பவங்களும் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நிகழ்ந்து வந்தன. உக்ருல் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 2 பேர் உட்பட மூவர் கொல்லபட்டனர்.
சந்தால் மாவட்டத்தின் பின்னணி
பர்மா எல்லையையொட்டிய மாவட்டம் சந்தால். நாகா இனக்குழுவினர் அதிகம் வசிக்கும் பிரதேசம். இந்தப் பகுதியை நாகாலாந்து மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்பது நாகாலாந்து தனிநாடு கோரும் பிரிவினைவாதிகளின் நீண்டகால கோரிக்கை.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அண்மையில் பல மாத பொருளாதார முற்றுகைப் போராட்டத்தை நாகாக்கள் நடத்தியிருந்தனர். இந்த மாவட்டத்தில் மட்டும் 11 நாகாலாந்து பிரிவினைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதே மாவட்டத்தில் பர்மாவின் எல்லையோரமான மோரேவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் தேர்தலும் நாகாலாந்தும்
நாடு விடுதலை அடைந்த போது நாகாலாந்து தனிநாடாக இருந்தது. பின்னர் ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. நாகாலாந்தின் சில பகுதிகள் அருணாசலப்பிரதேசம், அசாம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டன. இதேபோல் மணிப்பூர் மாநிலம் உருவாக்கப்பட்ட போதும் நாகாலாந்தின் சில பகுதிகள் இணைக்கப்பட்டன. இந்த பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்பது நாகா தீவிரவாதிகளின் நீண்ட நாள் கோரிக்கை. தற்போதைய சட்டபேரவைத் தேர்தலிலும் இது எதிரொலித்துள்ளது.
மணிப்பூரைப் பொறுத்தவரை பெரும்பான்மையினரவாக மைத்தி இனக்குழுவும் 2-வது பெரும்பான்மையினராக நாகாக்களும் உள்ளனர்.மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 4 மாவட்டங்களின் 11 தொகுதிக்ளில் நாகாக்கள் அதிகம் வசிக்கின்றனர். நாகாலாந்து மாநிலத்தின் ஆளும் நாகா மக்கள் முன்னணி, மணிப்பூரிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
நாகாலாந்து முதலமைச்சர் நெயிர் ராவ் மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நாகா இனத்தவர் வசிக்கும் மாவட்டங்கள் மீண்டும் நாகாலாந்துடன் இணைக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications