சஸ்பெண்ட் நடவடிக்கை எதிரொலி-அரசு கொடுத்த காரை திருப்பிக் கொடுத்தார் விஜயகாந்த்
சென்னை: சட்டசபையிலிருந்து 10 நாட்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட அரசுக் காரை திரும்ப ஒப்படைத்து விட்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். பிப்ரவரி 1ம் தேதி சட்டசபையில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஆவேசமாக எழுந்த விஜயகாந்த் நாக்கைத் துருத்தியபடியும், கையை நீக்கி மிரட்டுவது போலவும், ஏதோ சில வார்த்தைகளைச் சொல்லி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற பெருந்தலைவர்களைக் கண்ட தமிழக சட்டசபை வரலாற்றில் இதுபோல எந்த ஒரு கட்சியின் தலைவரும் ஆவேசமாக பேசியதில்லை, நடந்து கொண்டதில்லை என்பதால் விஜயகாந்த்தின் செய்கை பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. அவர் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அரசு தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக வழங்கிய காரை நேற்று தனது உதவியாளரை விட்டு அரசிடமே ஒப்படைத்தார் விஜயகாந்த். சஸ்பெண்ட் காலம் முடியும் வரை அவர் எந்த சலுகையையும் அனுபவிக்க முடியாது என்று ஏற்கனவே சபாநாயகர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இருப்பினும் காரைக் கேட்டு அரசுத் தரப்பில் எந்த உத்தரவும் விஜயகாந்த்துக்குப் போகவில்லை. ஆனால் அவரே காரைக் கொடுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications