சங்கரன்கோவில் தொகுதியில் அனைத்து கட்சிக் கொடி கம்பங்களையும் அகற்ற உத்தரவு
நெல்லை: இடைத் தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்றவும், மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதியில் கட்சிக் கொடி கம்பங்கள் வெளியே தெரியாத அளவுக்கு மூடி மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் அதிகாரிகள் பல உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அதன்படி, சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள கட்சிக் கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதியில் கட்சிக் கொடி கம்பங்கள் வெளியே தெரியாத அளவுக்கு மூடி மறைக்கப்பட வேண்டும்.
நகர்புறங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்படக் கூடாது. கிராமப் புறங்களில் வீடு, கட்டட உரிமையாளர்களிடம் முன் அனுமதி பெற்றே சுவர் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
மாவட்டத்தில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட பணிகளை மட்டுமே தொடர்ந்து மேற்கொள்ளலாம். புதிய பணிகளை மேற்கொள்ள கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications