சங்கரன்கோவில் இடைத்தேர்தல் : ம.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்கள் மனுதாக்கல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளார் சதன் திருமலைக்குமாரும், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமாரும் வெள்ளிக்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு மார்ச் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. வியாழக்கிழமையன்று அ.தி.மு.க. வேட்பாளர். முத்துச்செல்வி வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஒருவருக்கொருவர் வாழ்த்து
வெள்ளிக்கிழமையன்று தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார், சங்கரன்கோவில் சுவாமி சன்னதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார் அவருடன் தேமுதிகவினர் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர். சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் அலுவலர் தாமோதரனிடம், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மதியம் 1.20 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
முத்துக்குமார் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, வெளியே வந்தபோது மனு தாக்கல் செய்வதற்காக ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார், மதியம் 1.30 மணிக்கு முதன்மை உதவி தேர்தல் அலுவலர் தாமோதரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட 10 பேர் முன்மொழிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications