அகிலேஷை முதல்வராக்க முலாயம் தீவிரம்: ஆனால், தம்பி எதிர்க்கிறார்!

சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்ய நேற்று சமாஜ்வாடி கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பு இது. இதில் புதிய எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பல இளம் எம்எல்ஏக்களும் மூத்த தலைவர்களும் அகிலேஷ் யாதவையே முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அகிலேஷ் யாதவை முதல்வராக்க வேண்டும் என்ற கருத்தை எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களிடையே முலாயம் சிங் யாதவும் அகிலேஷ் யாதவுமே திணித்ததாகக் கூறப்படுகிறது.
கட்சியில் அகிலேஷுக்கு ஆதரவு பெருகுகிறது, அவரே முதல்வராக வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும் தலைவர்கள் அதிகமாகி வருகின்றனர் என்பது போன்ற கருத்தை உருவாக்க முலாயம் சிங் யாதவ் முயல்வதாகத் தெரிகிறது.
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு வந்துவிடாமல், எல்லாமே இயற்கையாகவே நடப்பது போன்ற பிரம்மையை உருவாக்கவே, நேற்றைய கூட்டத்தில் அகிலேஷ் கோஷம் பாடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சில மூத்த தலைவர்கள் முலாயம் சிங் தான் முதல்வராக வேண்டும் என்றனர். இவர்களும் முலாயம் சொல்லித் தான் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்பது ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின் அடுத்த சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்று கூறி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இந்த இடைப்பட்ட காலத்திலும் அகிலேஷ் யாதவுக்கு கட்சியில் முழு ஆதரவைத் திரட்டும் வேலையில் முலாயம் சிங் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக முலாயம் சிங் யாதவின் தம்பி ஷிவ்பால் சிங் யாதவுக்கு அகிலேஷை முதல்வராக்குவதில் விருப்பமில்லை என்று தெரிகிறது. அவரது ஆதரவாளர்களும் கட்சியில் ஓரளவுக்கு உள்ள நிலையில், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்தை எட்டவே முதல்வர் தேர்வை முலாயம் சில நாட்கள் ஒத்தி வைத்ததாகத் தெரிகிறது.
நேற்றைய கூட்டத்தில் அகிலேஷை முதல்வராக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் நரேஷ் அகர்வால் முன்மொழிய அதை கட்சியின் முக்கிய தலைவரான ராம் கோபால் யாதவ் வழி மொழிந்தார். இதையடுத்து பல தலைவர்களும் அகிலேஷுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.
ஆனால், முலாயம் சிங்கியின் தம்பி மட்டும் அமைதியாக இருந்தார். அவரது ஆதரவாளர்களும் அமைதியாக இருந்தனர். அதே போல முலாயம் சிங்கின் மிக நெருங்கிய நண்பரான ஆஸம் கான் அந்தக் கூட்டததுக்கே வரவில்லை. இத்தனைக்கும் அவரை அழைத்து வர அவரது தொகுதியான ராம்பூருக்கு தனி ஹெலிகாப்டரை அனுப்பினார் முலாயம் சிங்.
தனது தம்பியும் கட்சியின் முக்கிய முஸ்லீம் தலைவரும் அகிலேஷை முதல்வராக ஏற்க மறுப்பதால் தான் அடுத்த முதல்வர் குறித்த முடிவை முலாயம் சிங் ஒத்தி வைத்துவிட்டார் என்று தெரிகிறது.
இவர்களை சமாதானப்படுத்திவிட்டால் தனது விரும்பம்போல அகிலேஷை முலாயம் சிங் முதல்வராக அறிவிப்பார் என்று தெரிகிறது. வரும் சனிக்கிழமைக்குள் இவர்களையும் அகிலேஷுக்கு ஆதரவாகத் திருப்பி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி அகிலேஷை முதல்வராக முலாயம் அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் தானாக முதல்வர் பதவிக்கு அலையவில்லை என்பதைப் போல காட்டிக் கொள்ள தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்றும் அடுத்த முதல்வர் தனது தந்தை முலாயம் சிங் தான் என்றும் அகிலேஷ் கூறிக் கொண்டுள்ளார்.
கட்சியில் முலாயம் சிங் சொன்னால் அதை யாரும் தட்ட முடியாது என்றாலும், அகிலேஷ் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், எல்லா தலைவர்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன் முதல்வராக வேண்டும் என முலாயம் சிங் யாதவ் நினைக்கிறார்.












Click it and Unblock the Notifications