சிங்கள கடற்படையின் அட்டூழியத்தால் கடலுக்குப் போகவே அஞ்சும் தமிழக மீனவர்கள்
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்களை வீசித் தாக்கி அவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று நள்ளரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமி்ழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.
பிறகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீத் தாக்கினர். இதையடுத்து மீன் பிடிக்காமல் வலைகளை எடுத்துக் கொண்டு தப்பித்தால், பிழைத்தால் போதும் என்று மீனவர்கள் இன்று அதிகாலை கரை சேர்ந்தனர். இலங்கை கடற்படையின் அடாவடித் தாக்குதலில் சில மீனவர்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது வரை யாரும் இது குறித்து புகார் கொடுக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் கூறுகையில்,
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் அன்றில் இருந்து கடலுக்குப் போகவே பயமாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையும் எங்களைத் தாக்கினர். நேற்றும் எங்கள் மீது கற்களை வீசி கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். எனவே, இது போன்ற தாக்குதல்கள் நடக்காமல் இருக்க மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications