ராமஜெயம் கொலை வழக்கில் திருப்பம்: மர்ம வீட்டில் போலீஸ் சோதனை- திமுக பிரமுகர் கைது?

அதேசமயம் திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரையும், வக்கீல் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கொலை தொடர்பான முக்கியத் தகவல்கள் சில கிடைத்துள்ளதாகவும், அதை வைத்து சிலரை போலீஸார் மடக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் பெரும் இழுபறி நிலவி வருகிறது. பலரை போலீஸார் விசாரித்திருந்த போதிலும் இதுவரை கொலையாளிகள் குறித்த துப்பு கிடைக்கவில்லை. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளைப் பிடித்தே தீர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருப்பதால் போலீஸாரும் படு தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமஜெயம் வீடு உள்ள தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துத்தான் ராமஜெயத்தைக் கொலை செய்தனர் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வீட்டுக்குப் போலீஸார் விரைந்தனர். ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது இங்கு குடியிருந்தவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென வீட்டைப் பூட்டி விட்டுப் போய் விட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகம் வலுக்கவே போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த வீட்டில் வசித்து வந்த நபரின் செல்போன் எண்ணில் போலீஸார் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நபரையும் பிடிக்க போலீஸார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமஜெயம் கொலை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர் வளைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு வக்கீலும் சிக்கியுள்ளதாகவம் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலம் ராமஜெயம் கொலை தொடர்பான அனைத்து விவரங்களும் போலீஸாருக்குக் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.











Click it and Unblock the Notifications