கூடங்குளம் அணு உலை திறப்பு: மீனாட்சி அம்மன் கோயிலில் நாராயணசாமி அன்னதானம்!

இன்று விமானம் மூலம் மதுரைக்கு வந்த அமைச்சர், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். தனது சொந்த செலவில் கோவிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கூடங்குளம் அணுமின் நிலையம் தடையின்றி செயல்படவும், தமிழக மக்களின் இருளை அகற்றி ஒளி கொடுக்க வேண்டி மதுரை மீனாட்சி அம்மனிடம் வேண்டி இருந்தேன். வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து இன்று சாமி கும்பிட்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தேன்.
கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிக்க 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. முதல் அணுஉலையில் யுரேனியம் செறிவூட்டப்பட்டவுடன் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கும். முதல் அணு உலை திறந்து 2 மாதத்தில் 2-வது அணுஉலை செயல்படும். ரஷிய தொழில் நுட்பத்துடன் மிகச் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டக்காரர்களுடன் பலமுறை கூறியும் கேட்கவில்லை. இந்நிலையில் தற்போது அணுஉலை திறக்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, தமிழக காங்கிரசார், முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆதரவாக அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. பலர் வேலை இழந்துள்ளனர். எனவே கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 965 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் இதை வலியுறுத்தி உள்ளேன்.
இந்த கோரிக்கை பிரதமரின் பரிசீலனையில் இருக்கிறது.
இலங்கை தமிழர்களுக்கு பல உதவிகளை இந்தியா செய்து வருகிறது. குறிப்பாக வீடுகள், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை ரூ.2500 கோடியில் செய்துள்ளோம்.
இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள தமிழர்களுக்காக இந்தியா குரல்கொடுக்கும். ராமேசுவரம் கடல் பகுதியில் மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சமின்றி அதிக நிதியை ஒதுக்கி உள்ளது. கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திதான் இறுதி முடிவு எடுப்பார். தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது.
ராணுவ பிரச்சினையில் சர்ச்சையை கிளப்புவது தவறானது. பிரதமர் இதற்கு உரிய விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாரதீய ஜனதா இந்த விஷயத்தில் குறைசொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மண்எண்ணை, கியாஸ், டீசல் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்கள், வணிக நோக்கில் பயன்படுத்துவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது.இதை விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.












Click it and Unblock the Notifications