பொதுமக்களுக்கும் தடுப்பூசி- 2 லட்சம் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசு
சென்னை: மத்திய அரசிடம் 2 லட்சம் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசிகள் கேட்டு இருப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறி உள்ளார். தற்போது மருத்துவப் பணியாளர்களுக்கு போடப்படும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விரைவில் பொதுமக்களுக்கும் போடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
23 பேருக்கு பாதிப்பு
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
சென்னையில் 10 பேர் உள்பட தமிழ்நாடு முழுவதும் 23 பேர் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நான்கரை லட்சம் டாமி புளு மாத்திரைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. 25 ஆயிரம் தடுப்பு ஊசிகளை மத்திய அரசு இதுவரை வழங்கியுள்ளது. மேலும் 2 லட்சம் தடுப்பு ஊசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் டாமி புளு மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகிறது.
வெளிமாநிலத்திலிருந்து வருவோரால் பாதிப்பு
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரிடமிருந்துதான் தமிழக மக்களுக்கு பன்றி காய்ச்சல் நோய் பரவுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யும் வகையிலும் ரெயில் மற்றும் விமான நிலையங்களில் நோய் தடுப்பு மையம், மருத்துவ குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக சென்னையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடும் பணி சென்னையில் தொடங்கியுள்ளது. கோவையில் அரசு மருத்துவர்கள், பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி போடும் பணியும் தொடங்குகிறது.
பொதுமக்களுக்கும் தடுப்பூசி
பொது மக்களுக்கும் தடுப்பு ஊசி போடும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனைகளிடம் இருந்தும் 50 ஆயிரம் தடுப்பு ஊசிகளை கேட்டு உள்ளோம்.












Click it and Unblock the Notifications