யாழ்ப்பாணத்தின் சீரமைப்பு பணிகள் பிரம்மிக்க வைக்கிறது: சுஷ்மா ஸ்வராஜ்

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை சென்றுளள இந்திய எம்.பி.க்கள் குழு நேற்று யாழ்ப்பாணம் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை பார்வையிட்டது. இந்திய குழுவை சந்திக்க அப்பகுதியில் உள்ள மத்திய கல்லூரியில் ஏராளமான தமிழர்கள் கூடினர். அவர்களை எம்.பி.க்கள் குழு சந்தித்து பேசியது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்ததனால் யாழ்ப்பாணத்திற்கு வந்தோம். போருக்குப் பிறகு இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை பார்த்து பிரமித்துவிட்டோம் என்றார்.
முன்னதாக அவர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்தியா ஐ.நா. தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது என்றார்.
தொடர்ந்து அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வழிகாட்டுதலின்படி யாழ்ப்பாணத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் உதவியோடு யாழ்ப்பாணத்தை மேலும் சீரமைப்பதே தனது நோக்கம் என்றார்.
இந்தியா கட்டிய மருத்துவமனையை திறந்து வைத்த எம்.பி.க்கள் குழு:
இந் நிலையில் இந்திய எம்.பி.க்கள் குழு முல்லைத் தீவில் இந்திய அரசு கட்டிய மருத்துவமனையை திறந்து வைத்தது.
இலங்கையில் நடந்தபோரின் போது முல்லைத் தீவில் இருந்த மருத்துவமனையை ராணுவம் குண்டு வீசித் தகர்த்தது. இதையடுத்து அங்கு ரூ.3.5 கோடி செலவில் 150 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவமனையை இந்கிய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இந்த மருத்துவமனையை எம்.பி.க்கள் குழு திறந்து வைத்தது.
மேலும் அந்தப் பகுதியில் இந்திய அரசு கட்டிவரும் 50,000 வீடுகளையும் அந்த குழு பார்வையிட்டது. அங்கு 100 படுக்கைகள் கொண்ட மேலும் ஒரு மருத்துவமனையை இந்திய அரசு கட்டி வருகிறது. அதையும் இந்திய எம்.பி.க்கள் பார்வையிட்டது.
அந்த பகுதி மக்கள் பெரும்பாலும் சைக்கிள்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். போரின்போது 1 லட்சம் சைக்கிள்கள் சேதமாகின. இதையடுத்து அவர்களுக்கு எம்.பி.க்கள் குழுவினர் புதிய சைக்கிள்களை வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications