இந்தியாவால் ஏவுகணை அச்சுறுத்தல் இல்லை: நேட்டோ
புருஸெல்ஸ்: இந்தியா அதிநவீன ஏவுகணைகளைத் தயாரித்தாலும் அதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று நேட்டோ செகரடரி ஜெனரல் ஆன்டர்ஸ் போக் ராஸ்மஸ்ஸன் தெரிவித்துள்ளார்.
5,000 கிமீ வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி V ஏவுகணை இன்று காலை 8.05 மணிக்கு ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அக்னி V ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது, அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5,000 கிலோமீட்டர் தூரம் வரை இது பாயக் கூடியது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டும் தான் இதுவரை வைத்திருந்தன. தற்போது அந்த பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.
அக்னி V ஏவுகணையின் மூலம் சீனா முழுவதையும் நமது தாக்குதல் இலக்குக்குள் கொண்டு வர முடியும். அத்தோடு நில்லாமல், ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட நம்மால் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புருஸெல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த நேட்டோ செகரடரி ஜெனரல் ஆன்டர்ஸ் போக் ராஸ்மஸ்ஸன் கூறுகையில், இந்தியா அதிநவீன ஏவுகணை தயாரித்தாலும் அதனால் கூட்டணி நாடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications