காங்கிரஸுக்கு ஓட்டுபோடாதீங்க என்று எழுதி வைத்துவிட்டு மகாராஷ்டிரா விவசாயி தற்கொலை
யவாத்மால்: மக்கள் மீது அக்கறை இல்லாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்தவர் கஜானந்த் கோதேகர்(45). விவசாயி. பருத்தி பயிரிட்டிருந்த அவர் லோனில் டிராக்டர் ஒன்றை வாங்கி விவசாயம் செய்தார். ஆனால் பருத்தியின் விலை குறைந்தததால் அவரால் ரூ. 1 லட்சம் கடனைத் திருப்பிக் கட்ட முடியவில்லை. இந்நிலையில் அவரது இளைய மகளின் திருமண ஏற்பாடுகள் வேறு செய்ய வேண்டியிருந்தது.
ஏற்கனவே கடனில் தத்தளிக்கையில் திருமண ஏற்பாடுகள் செய்ய முடியாமல் அவர் நேற்று பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,
மாநில, மத்திய அரசுகள் பருத்திக்கு நல்ல விலை அறிவிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. எனவே, விவசாயிகள் பற்றி சிறிதும் கவலைப்படாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கோதேகர் உள்பட 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications