மே 2ல் மதுரை மீனாட்சிக்கு திருக்கல்யாணம்-6ம் தேதி ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!

சித்திரை மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாதான். சைவத்தையும், வைணவத்தையும் இணைத்து ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெறும் இந்த கோலாகல வைபவம் இந்த ஆண்டும் கோலாகலமாக தொடங்கியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. பச்சை பட்டில் அம்மனும், வெண்பட்டில் சோமசுந்தரப் பெருமானும் வீற்றிருக்க, ரிஷப யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. பின்னர் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து பிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள், திருமுறை பாராயணம் பாடப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 30ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதையடுத்து மே 1ம் தேதி திக்குவிஜயம் நடைபெறும்.
மே 2ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அன்று இரவு அம்மனும், சாமியும் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதையடுத்து மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெறும்.
மே 5ம் தேதி எதிர்சேவை
இதையடுத்து வைணவ நிகழ்ச்சியான அருள்மிகு கள்ளழகர் மதுரை வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 5ம் தேதி எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் கள்ளழகரை எதிர்கொண்டு பக்தர்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள்.
மே 6ம் தேதி காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இரு சமய நல்லிணக்கம்
மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவானது சைவ சமயத் திருவிழாவாகும். அதேபோல கள்ளழகர் திருவிழா வைணவ விழா. இந்த இரண்டையும் இணைத்து ஒரே விழாவாக மாற்றி சித்திரைத் திருவிழா சீரோடும், சிறப்போடும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications