அலெக்ஸ் பால் மேனனை விரைவாக விடுவிக்க நடவடிக்கை தேவை-பிரமதருக்கு ஜெ. கடிதம்

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒடிசா மாநில எல்லையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் உள்ள பணிகளை பார்வையிட தனது அலுவலக சோதனைக்காக சென்றிருந்த சத்தீஷ்கார் மாநில சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மாவோயிஸ்டுகளால் கடந்த 21-ந் தேதி கடத்தப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
கடத்தப்பட்ட அதிகாரி தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடைய பாதுகாப்பு குறித்து, அவருடைய குடும்பத்தினர் மிகவும் கவலையோடு இருக்கிறார்கள். மாவட்ட கலெக்டராக தனது அலுவலக பணிகளை ஆற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அந்த அதிகாரி கடத்தப்பட்டது மிகவும் துரதிஷ்டவசமானதாகும்.
கடத்தப்பட்ட அதிகாரியை விரைவில் பாதுகாப்புடன் விடுவிக்க மத்திய அரசாங்கத்தின் உள்துறை ஏற்கனவே நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட உள்ளூர் மக்கள் அனைவரும் இந்த சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த கவலையோடு இருக்கிறார்கள். குறிப்பாக அந்த அதிகாரி உடல் நலம் இல்லாமல் இருப்பதால் கடத்தப்பட்ட அவர் விரைவில் விடுவிக்கப்பட்ட நல்ல செய்தியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அதிகாரியை விரைவில் பாதுகாப்போடு விடுவித்து அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு நிம்மதியை அளிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications