மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி- அன்புமணி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இண்டக்ஸ் என்ற தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 2008-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ்.
டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் கூறி இருப்பதாவது:
மாயங் நல சங்கம் என்ற அமைப்பு மத்தியபிரதேசம் இந்தூரில் மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி தொடங்க திட்டமிட்டது. இதற்கான அனுமதியை பெற பாடோரியாவுக்கு அதிகாரம் அளித்திருந்தது 2007-2008-ம் கல்வி ஆண்டில் புதிய மருத்துவ கல்லூரியைத் தொடங்க அந்த அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் பேரில், ஓராண்டுக்கு மட்டும், அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இதற்கான ஒப்புதலை அளித்தார்.
அதன்படி, இந்தூரில் இண்டக்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை புதுப்பிக்குமாறு அக்கல்லூரி கோரியபோது, போதுமான வசதிகள் ஏதும் அந்தக் கல்லூரியில் இல்லை எனத் தெரியவந்தது. இதனால் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட குழு கல்லூரிக்கான அனுமதியை புதுப்பிக்க்க கூடாது என்று சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.
இருப்பினும் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு குழுவை அனுப்பி அக்கல்லூரியின் அடிப்படை வசதி குறித்து ஆராய்ந்தது. அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்ற குழுவின் பரிந்துரையை மீறி உரிய வசதிகள் இருப்பதாகக் கூறி அன்புமணி ராமதாஸ் 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்தார்.
இதில் குற்றம்சாட்டப்பட அன்புமணியும் மற்றவர்களும் இணைந்து சதி செய்ததில் கல்லூரி நிர்வாகம் பண ஆதாயம் அடைந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ், டெல்லி சப்தர்ஜிங் மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் உட்பட மொத்தம் 10 பேர் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications