விரைவில் புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம் - ஜெயலலிதா தகவல்
சென்னை: தமிழகத்தில் விரைவில் புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சிறப்பு பவளவிழாவில் அவர் பேசியதாவது:.
தமிழகத்துக்கு 7-வது இடம்
தற்போது இந்தியாவில் 50 விழுக்காடு சேமிப்புகள் வங்கிக்கணக்கு சேமிப்புகளாக உள்ளன. அதிலும் 42 விழுக்காடு வணிக வங்கிகளில் சேமிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் 2010-2011 ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 61 விழுக்காடு மக்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார்கள்.
அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைப்பது தொடர்பாக நபார்டு வங்கி மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பீடு மேற்கொண்டது. அதில், இந்தியாவில் தமிழ்நாடு 7-ம் இடத்தை பெற்றுள்ளது. தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது எனது கனவு. இதனை நனவாக்கும் வகையில் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.
வங்கிகள் மூலம் ஓய்வூதியம்
நீண்ட காலமாக அரசு சார்பில் வங்கிகள் வரிவசூல் செய்கின்றன. அதேபோல், அரசும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகைகளை வங்கிகள் மூலமாகவே வழங்குகிறது. அனைத்து விதமான சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களையும் வங்கி மூலமாக வழங்க தமிழக அரசு விரும்புகிறது. இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சம்பளத்தொகையும், பயனாளிகளுக்கு வங்கி மூலமாகவே வழங்க வேண்டும்.
புதிய முறைக்கு யோசனை
தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை முறை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அமல்படுத்தப்படும்போது அரசுக்கு வரவேண்டிய வருவாய், இதேபோல், பயனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித்தொகை என அனைத்தும் வங்கி மூலமாக மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக தானாக இயங்கக்கூடிய நிலை உருவாகும். இதன்மூலம் பணப்பரிமாற்றம் விரைவாக நடப்பதுடன் பயனாளிகளுக்கும் திருப்தியான சேவை கிடைக்கும். இந்த புதிய முறையை செயல்படுத்த மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயத்துக்கு கூடுதல் கடன்
தமிழ்நாட்டில் 2-வது பசுமை புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நான் சபதம் எடுத்து இருக்கிறேன். ஆகையால் விவசாயத்துறைக்கு அதிகளவு கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். 2011-2012-ம் ஆண்டு விவசாயத்துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் இலக்கு ரூ.31,017 கோடி. ஆனால், இந்த இலக்கை விஞ்சி ரூ.48,584 கோடி கடன் வழங்கப்பட்டது. எப்படி 2011-2012-ம் ஆண்டு விவசாயத்துறைக்கு இலக்கை விட அதிகளவு கடன் அளிக்கப்பட்டதோ அதேபோல் 2012-2013-ம் நிதி ஆண்டிலும் இலக்கை காட்டிலும் அதிகமாக கடன் வழங்க வேண்டும்.
தொழில்முனைவோர் திட்டம்
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையும் மிகவும் முக்கியமான துறை ஆகும். முன்பு நன்கு வளர்ச்சி அடைந்திருந்த இந்த துறையானது தற்போது வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளது. இளம் தொழில்முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களின் திட்டங்களை செயல்படுத்த நிதி நிறுவனங்களிடம் இருந்து தேவையான நிதி உதவி பெறவும் விரைவில் புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த ஐ.ஓ.பி. உள்ளிட்ட இதர வங்கிகளின் உதவியை எதிர்பார்க்கிறேன்.
மேலும் வங்கிகள் மாணவர்களிடம் படிப்புக்கு கடன் கொடுப்பதுடன் நின்றுவிடாமல் அவர்கள் படிப்பை முடித்த பிறகு தொழில் தொடங்கவும் கடன் வழங்க முன்வரவேண்டும் என்றார் அவர்,
முன்னதாக, ஐ.ஓ.பி. வங்கியின் பவளவிழா மலரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட, முதல் பிரதியை வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.நரேந்திரா பெற்றுக்கொண்டார். விழாவில், ஐ.ஓ.பி. வங்கியின் பாதுகாப்பு பணியாளர் சம்பள கணக்கு, மாணவர் கல்விக்கடன் என்ற 2 புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
இந்த பவள விழாவையொட்டி தமிழ்நாட்டின் 75 கிராமங்களில் சூரியமின்சக்தி விளக்கு (சோலார் லேம்ப்) வசதியை ஐ.ஓ.பி. வங்கி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இந்த வசதியையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
ரூ82 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம்
முன்னதாக, வரவேற்று பேசிய ஐ.ஓ.பி. வங்கியின் தலைவர் என்.நரேந்திரா, வங்கியின் வர்த்தகம் 3.22 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.82 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கி உள்ளோம். 17,400 சுயஉதவி குழுவினருக்கு கடன் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் கிளைகளில் 70 விழுக்காடு கிளைகள் கிராமப்புறங்களிலும், சிறுநகரங்களிலும் செயல்படுகின்றன'' என்றார் அவர்.












Click it and Unblock the Notifications