விஜயகாந்த் வருவாரா, இல்லாட்டி திரும்பவும் நடிக்கப் போவாரா?... அமைச்சர் கேள்வி!
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டசபைக்கு வந்து தனது கடமையை ஆற்றுவாரா இல்லாவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு நடிக்கப் போய் விடுவாரா என்று சட்டசபையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் கேட்ட கேள்வியால், தேமுதிக உறுப்பினர்கள் பெரும் கூச்சல், குழப்பத்தில் இறங்கினர்.
இப்போதெல்லாம் சட்டசபையில் விஜயகாந்த்தும் ஒரு விவாதப் பொருளாகி விட்டார். அவர் சட்டசபைக்கு வராமல் இருப்பதையே ஒரு பிரச்சினையாக்கி ஆளுங்கட்சியினர் தேமுதிகவினரை தொடர்ந்து சீண்டி வருகின்றனர். நேற்றும் கூட விஜயகாந்த் விவகாரம் சட்டசபையில் சூடாக ஓடியது.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேமுதிக உறுப்பினர் பாஸ்கர் பேசினார். அவருக்கு அடுத்துப் பேசிய அதிமுக உறுப்பினர் மனோகரன் கூறுகையில், சித்திரை மாத வெயிலில் தன்னிலை மறந்து, தொகுதி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருக்க, மக்களிடம் மனுக்களை வாங்கிக்கொண்டிருக்கிறார் விஜயகாந்த்தை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார். இதைக் கேட்டதும் தேமுதிகவினர் கொந்தளித்து விட்டனர்.
இதையடுத்து குறுக்கிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது, நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டசபைக்கு வராமல் மற்றவர்களின் தொகுதிகளுக்குச் சென்று மனுக்களை வாங்கிக்கொண்டிருக்கிறார். அவரது தனது கடமையை ஆற்றாமல் தேவையில்லாமல் தவறு செய்துகொண்டிருக்கிறார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார், ஆடு பகை, குட்டி உறவு என்பது போல அமைச்சர் பேசுகிறார். எங்கள் தலைவர் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்குச் சென்று அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார். சட்டசபைக்கு எந்த நேரத்தில் வரவேண்டுமோ, அந்த நேரத்தில் வருவார் என்றார்.
அப்போது எழுந்த தேமுதிக உறுப்பினர் மாபா பாண்டியராஜன் ஆவேசமாக கூறுகையில், எங்கள் தலைவரைப் பார்த்து எப்படி, சித்திரை வெயிலில் தன்னிலை மறந்து மனுக்களை வாங்கிக்கொண்டிருக்கிறார் என்று அ.தி.மு.க. உறுப்பினர் விமர்சனம் செய்யலாம்? என்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த சபாநாயகர் ஜெயக்குமார், உறுப்பினர் பாண்டியராஜன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். அதற்கான இடம் இது அல்ல. விவாதம் நடக்கக்கூடிய இடம் இது. அவர் அடிக்கடி அனுமதி இல்லாமலேயே பேசிக்கொண்டிருக்கிறார். அவருக்கு பேசுவதற்கு எப்போது அனுமதி வழங்கப்படுகிறதோ அப்போதுதான் அவர் பேச வேண்டும். அனுமதி இல்லாமல் இனிமேல் பேசினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது இருக்கும் என்றார்.
அப்போது எழுந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் தனது கடமையை ஆற்றுவாரா? இல்லாவிட்டால் மீண்டும் சினிமாவுக்கு நடிக்க சென்றுவிடுவாரா? என்றார். இதைக்கேட்டதும் தேமுதிகவினர் கொந்தளிப்பு அதிகமானது.
பின்னர் வி.சி.சந்திரகுமார் பேசுகையில், எங்கள் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றிக்கொண்டுதான் இருக்கிறார் என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மக்கள் மன்றத்தை மதிக்காமல் சட்டசபையை மதிக்காமல் இருக்கும் அவருக்கு பேச அருகதையே இல்லை என்றார். அதற்கு சந்திரகுமார், அவர் எப்போது சட்டசபைக்கு வரவேண்டுமோ, அப்போது வருவார் என்றார்.
பின்னர் எழுந்த அமைச்சர் கே.பி.முனுசாமி, இப்போது மிகவும் முக்கியமான நேரம், வரவு-செலவு மீது விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இப்போது வராமல் பிறகு எப்போது சட்டசபைக்கு வரப்போகிறார்? ஒருவேளை முன்னாள் முதல்வர் போல லாபியில் வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போய் விடுவாரா? என்றார். இதைக் கேட்டதும் மீண்டும் தேமுதிகவினர் டென்ஷன் ஆனார்கள். இப்படியே விவாதம் ந்டந்தது.












Click it and Unblock the Notifications