வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் காப்பியடித்த மாணவரின் மனு தள்ளுபடி
சென்னை: மருத்துவக் கல்லூரி தேர்வில் வசூல்ராஜா சினிமா பாணியில் பிட் அடித்ததாலேயே மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் இதனைத் தடுக்க செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
வழக்கு என்ன?
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர் ஆரிப் முகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தமது எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டுத் தேர்வு முடிவை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக புகார் மனு கொடுத்தும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் தமக்கு தேர்வு முடிவுகளை தெரிவிக்க பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆரீப்கான் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி கே.சந்துரு. வழக்கு விசாரணையின் போது எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நர்மதா சம்பத் கூறியதாவது:
சினிமா பாணியில் பிட் அடிப்பு
இறுதி ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 10 பேர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா பட பாணியில் செல்போன் உதவியுடன் பிட் அடித்து எழுதியுள்ளனர். இந்த 10 பேரில் வழக்குத் தொடர்ந்துள்ள மாணவர் ஆரிப் முகமதுவும் ஒருவர். இதனால்தான் தேர்வு முடிவை வெளியிடவில்லை.
சினிமா பாணியில் மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க செல்போன் ஜாமர் கருவிகளைத் தேர்வு மையங்களில் பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்
பல்கலைக் கழகத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்துரு மாணவன் ஆரிப் முகமதுவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications