ஜனாதிபதி தேர்தல்: யாருக்கு ஆதரவு என்று பிறகு சொல்கிறேன்- கருணாநிதி

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் சென்னை செல்வதற்காக திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வந்த அவர் செய்தியாளிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை நிறுத்தும் என்பதால் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் தற்போது ஒரே குழப்பமான சூழல் நிலவுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் மாறும் நிலை உள்ளது. அதனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எனது ஆதரவு யாருக்கு என்பதை பின்னர் தெரிவிக்கிறேன். அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.
பிரதமர் மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்க பேச்சு நடக்கிறதே என்று கேட்டதற்கு, அது குறித்து பதில் இல்லை என்று கூறிவிட்டார்.
பிறகு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை கிளம்பினார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை நிறுத்த நினைத்தது. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த இடதுசாரித் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிரணாபை மாற்றிவிடலாமா என்று காங்கிரஸ் ஆலோசனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications